

2-ம் நாள் மாநாடு
சர்வதேச அளவில் 2 நாட்கள் நடைபெறும் உலக பருவநிலை உச்சி மாநாடு நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பருவநிலை மாறுபாடு காரணமாக சந்தித்து வரும் சவால்கள் குறித்து அனைவரும் இதில் பேசினர்.
அப்போது இந்தியா சார்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டின் கருப்பொருள் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் காணொலி காட்சி மூலமாக உலக பருவநிலை உச்சி மாநாடு நடைபெற்றது. இதில், அமீரகத்தின் சார்பில் காணொலி காட்சி மூலம் துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த உச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அமீரகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். பருவநிலை குறித்த சவால்களுக்கான தீர்வை அளிக்க எதிர்கால தலைமுறையினருக்கு வாய்ப்புகளை அளிக்க வேண்டும். அமீரகம் உலகின் பெட்ரோலியத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இருந்தபோதிலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கார்பன் உமிழ்தலை கட்டுப்படுத்த மாற்று எரிசக்தியை பயன்படுத்தும் வகையிலான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளோம். மேலும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியில் 70 நாடுகளில் முதலீடுகளையும் செய்துள்ளோம்.
எனவே பருவநிலை மாறுபாடுகளில் இருந்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முயற்சிகளுக்கு அமீரகத்தின் பங்களிப்பு இருக்கும் என உறுதி கூறுகிறேன்.பருவநிலை மாற்றம் தற்காலிக பிரச்சினை இல்லை. உலக அளவில் தொடரும் சவாலாக உள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக இந்த உலகத்தை நாம் பாதுகாத்திட வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு இந்த முயற்சிக்கு கைகொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் பேசினர். அதன் பின்னர் இந்த உச்சி மாநாடு நிறைவடைந்தது.