

பெய்ஜிங்,
சீனாவின் கடந்த டிசம்பர் இறுதியில் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 170க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகளாவிய பலி எண்ணிக்கை 16 ஆயிரத்திற்கும் மேல் சென்றுள்ளது. உலகெங்கிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்து உள்ளது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதற்கும் ரெயில் சேவை வருகிற 31ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய வைரஸ் பாதிப்பின் தீவிரத்தினை கட்டுப்படுத்தும் முனைப்பில் பல்வேறு நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், வடஅமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனால் மக்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட கூடிய சூழல் உள்ளது என இங்கிலாந்து நாட்டு பெண் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். இதேபோன்று பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழலும் உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் பிரதமர் போரீஸ் ஜான்சன், 3 வார காலம் வரை அத்தியாவசிய தேவை இல்லாத கடைகளை மூடவும் மற்றும் சேவைகளை ரத்து செய்யவும் உத்தரவிட்டு உள்ளார்.
பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்கவும் என அவர் தொலைக்காட்சி உரையில் தெரிவித்து உள்ளார்.
உலகளவில் 170 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில், சீனாவில் பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
சீனாவில் இன்றிரவு முதல் உடல்நலமுடன் உள்ளவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கடந்த 2 மாதங்களாக வைரஸ் பாதிப்பிற்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சீனாவில் பலியாகி வந்தனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகளவில் காணப்பட்ட உகான் நகரில் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என சீன அரசு கூறியுள்ளது.
எனினும், வைரஸ் தோன்றிய உகான் நகரில் வரும் ஏப்ரல் 8ந்தேதி வரை இந்த விதிமுறைகள் தளர்த்தப்படவில்லை. உலக நாடுகளில் முதலில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட சீனா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளது.