சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி 2-வது நாளாக உலக சுகாதார நிறுவன குழு விசாரணை

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி உகான் நகரில் 2-வது நாளாக உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் குழு விசாரணை நடத்தியது.
உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு
உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு
Published on

உலக சுகாதார நிறுவன குழு

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக நாடுகளையெல்லாம் உலுக்கி விட்டது. இன்றளவும் அதற்கு எதிராக உலகமே ஒன்றிணைந்து யுத்தம் நடத்தி வருகிறது.

இந்த தருணத்தில், கொரோனா வைரஸ் உகான் நகரில்தான் தோன்றியது என்பதை சீனா மறுக்கிறது. ஆனாலும், இந்த வைரஸ் அங்குதான் தோன்றியதா என்பதை கண்டறிவதற்கு உலக சுகாதார நிறுவனம், தனது நிபுணர்கள் குழுவை அங்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த குழுவினர் விலங்குகளின் ஆரோக்கியம், வைராலஜி, உணவு பாதுகாப்பு, தொற்றுநோயியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆவார்கள். இவர்கள் 2 வார காலம் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது வெளியே வந்து தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

விஞ்ஞானிகளிடம் விசாரணை

சீன விஞ்ஞானிகளை நேற்று முன்தினம் நேருக்கு நேர் சந்தித்து, இவர்கள் விசாரணை நடத்தினர். கொரோனா வைரஸ் தொடர்பான பல கேள்விகளை எழுப்பி பதில்களை பெற்று பதிவு செய்தனர். ஹூபெய் ஒருங்கிணைந்த சீன மற்றும் மேற்கத்திய மருத்துவ ஆஸ்பத்திரிக்கும் அவர்கள் சென்று விசாரணை நடத்தினர். இங்கு கொரோனா நோயாளிகளுக்கு முதன் முதலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

2-வது நாள்...

இந்த குழுவினர் 2-வது நாளாக நேற்று உகானில் உள்ள ஜின்யந்தன் ஆஸ்பத்திரியில் ஆய்வும், விசாரணையும் நடத்தினர். ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரிகளில் இதுவும் ஒன்றாகும். அதுமட்டுமின்றி இந்த தொற்றுநோயியல் வரலாற்றில் இந்த ஆஸ்பத்திரி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

இருப்பினும், உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் உலக சுகாதார நிறுவன நிபுணர் குழுவினர் முக்கிய கவனம் செலுத்துவார்கள் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்குதான் சீனாவின் முன்னணி வைரஸ் ஆராய்ச்சி ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்டவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com