

ஜெனீவா,
சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த பின்னர் வரும் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், உலகம் முழுவகும் 20 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது தொற்றில் இருந்து மீண்ட பிறகு எழும் உடல் நில பிரச்னைகளால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறித்த விவரங்கள் எங்களிடம் இல்லை.
ஆனால் தொற்றிலிருந்து மீண்ட பிறகு எழும் உடல்நல பிரச்சினைகள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. நீண்ட நாள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றிலிருந்து மீண்ட பிறகு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்கள் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவு நாட்கள் வரை இப்பிரச்னைகள் நீளும் என, எங்களுக்கு தெரியாது. இதுகுறித்து மேலும் புரிந்து கொள்ள, ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.