ரஷியா, உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தைக்கு உதவ வேண்டும்: உலக நாடுகளுக்கு சீன அதிபர் அழைப்பு

உலகளாவிய குழப்பங்களுக்கு இடையே ஒரு நிலையான அரசாக சீனா இருந்து வருகிறது என்று அங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன் கூறியுள்ளார்.
ரஷியா, உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தைக்கு உதவ வேண்டும்: உலக நாடுகளுக்கு சீன அதிபர் அழைப்பு
Published on

பீஜிங்,

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிராக, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான இந்த போரானது 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக நீடித்து வருகிறது.

இரு நாடுகளும் தூதரக அளவிலான பேச்சுவார்த்தை வழியே சமரசம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உலக நாடுகளும் இதனை முன்னிறுத்தி வருகின்றன. எனினும், போரானது முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், அங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன், போரில் ஈடுபட்டுள்ள ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு கடந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

நீண்டகால போரை முடிவுக்கு கொண்டு வந்து இரு நாடுகள் இடையே அமைதி திரும்புவதற்கான நலன்களுக்காக, ஆலோசனை மேற்கொள்வதற்காக அவருடைய இந்த சுற்றுப்பயணம் அமைந்திருந்தது. இந்த சூழலில், அவர் திடீரென சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு பற்றி சீனாவில் இருந்து வெளிவரும் சி.சி.டி.வி. என்ற அரசு ஊடகம் வெளியிட்டு உள்ள செய்தியில், ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் மீண்டும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அமைதிக்கான தீர்வு எட்டப்பட வேண்டும். இதற்கு உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்று அதிபர் ஜின்பிங் கேட்டு கொண்டார் என தெரிவித்து உள்ளது.

அமைதி ஏற்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வ மற்றும் முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்ததற்காக சீனாவுக்கு ஆர்பன் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டதுடன், உலகளாவிய குழப்பங்களுக்கு இடையே ஒரு நிலையான அரசாக சீனா இருந்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com