

வாஷிங்டன்,
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த 'ஜென்னி' என்ற குதிரை, உலகின் மிக நீளமான வால் கொண்ட குதிரை என்ற புதிய கின்னஸ் உலக சாதனையை நாட்டியுள்ளது. என கின்னஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் மெக்கன்சி லோவ். இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டில் 13-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அமெரிக்க சடில்ப்ரெட் இனத்தைச் சேர்ந்த ஜென்னி என்ற பெண் குதிரை ஒன்று மெக்கன்சிக்கு பரிசாக அளிக்கப்பட்டது. இந்த குதிரையை மெக்கன்சி லோவ் மற்றும் ரேச்சல் எஸ்டெஸ் ஆகியோர் வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி அன்று அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் ஸ்பிரிங் வேலி பகுதியில், கின்னஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஜென்னி குதிரையின் வாலின் நீளம் துல்லியமாக அளவிடப்பட்டது. அதன் வால் 13 அடி 6 அங்குலம் (சுமார் 4.12 மீட்டர்) நீளம் கொண்டதாக இருந்தது.
சராசரி மனித உயரத்தை விட 2 மடங்கு நீளமுள்ள இந்த வால், உலகிலேயே ஒரு குதிரைக்கு இருக்கும் மிக நீளமான வால் என உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகின் மிக நீளமான வால் கொண்ட குதிரை என்று ஜென்னி கின்னஸ் உலக சாதனை படைத்தது. மேலும் இதற்கான கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
"ஜென்னியின் வால் தரையில் பட்டு சேதமடையாமல் இருக்க, கடந்த 7 ஆண்டுகளாக வாரத்திற்கு இரண்டு முறை அதனைத் தனித்துவமான முறையில் கழுவி, பின்னலிட்டு, சிறப்புப் பைகளில் வைத்துப் பாதுகாத்து வந்தோம்" என்று உரிமையாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் 2012-ம் ஆண்டு 'ஜேடி' என்ற குதிரை 12 அடி 6 அங்குல வாலுடன் படைத்திருந்த சாதனையை, 13 அடி 6 அங்குல நீள வாலுடன் ஜென்னி குதிரை முறியடித்து புதிய சரித்திரம் படைத்துள்ளது.