எக்ஸ்போ 2020 கண்காட்சி: உலக பொருளாதார மீட்புக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் மந்திரிசபை கூட்டத்தில் துணை அதிபர் பேச்சு

எக்ஸ்போ 2020 கண்காட்சி உலக பொருளாதார மீட்புக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் என்று மந்திரிசபை கூட்டத்தில் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்தார்.
எக்ஸ்போ 2020 கண்காட்சி: உலக பொருளாதார மீட்புக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் மந்திரிசபை கூட்டத்தில் துணை அதிபர் பேச்சு
Published on

அபுதாபி,

எக்ஸ்போ 2020 கண்காட்சி உலக பொருளாதார மீட்புக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் என்று மந்திரிசபை கூட்டத்தில் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்தார்.

அமீரக மந்திரிசபை கூட்டம் அபுதாபி கஸர் அல் வத்தன் அரண்மனை வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், நடப்பு (2021) ஆண்டில் நடைபெற உள்ள மாபெரும் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி குறித்த ஆலோசனை நடைபெற்றது.

குறிப்பாக 10 ஆண்டுகளாக தொடங்கிய ஏற்பாட்டு பணிகள், 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உழைப்பில் 190 நாடுகள் பங்கேற்கும் அரங்கங்கள், கண்காட்சி தொடங்க இருக்கும் 170 நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சி நிரல்கள் குறித்து பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து அமீரக துணை அதிபர் பேசும் போது கூறியதாவது:-

துபாயில் உலக கண்காட்சி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த எக்ஸ்போ வெற்றி பெறும்பட்சத்தில் உலக அளவில் கொரோனா பாதிப்பால் இழந்த பொருளாதாரத்தை மீட்பதற்கான நம்பிக்கையை அனைவருக்கும் அளிக்கும். எனவே மந்திரிகள் அனைவருக்கும் இதனை வெற்றி பெற செய்யவும், சர்வதேச ஒத்துழைப்புடன் அடுத்த கட்டமாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி மனங்கள் இணைப்பு மற்றும் எதிர்காலத்தை கட்டமைப்பது என்ற கருப்பொருளில் நடத்தப்படும். அமீரகத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை கொண்டாட உள்ள நிலையில் நாம் வளர்ச்சிப்பாதையில் இது ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

எக்ஸ்போ 2020 அமீரகத்தின் கலாசாரத்தை, வரலாற்றை பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளது. எனது நோக்கத்திற்கும், இலக்கிற்கும் எல்லையில்லை என்பதை உணர்த்தும் விதமாக சாதனை படைக்க உள்ளது.

அமீரக மத்திய அரசுத்துறைகள், விண்வெளி, தண்ணீர், பருவமாறுபாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சகிப்புத்தன்மை, அறிவுத்திறன் மற்றும் கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு தலைப்புகளில் பங்கேற்க உள்ளது. அதேபோல் அமீரகத்தின் ஏற்றுமதியாளர்களுக்கு தங்கள் வர்த்தகத்தில் 50 சதவீதம் கூடுதல் பலன் கிடைக்கும் வகையில் தேசியக்கொள்கை வரைவு செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் அளிக்கப்படுகிறது.

வரி விதிப்புக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கான காலக்கெடு 10 நாளில் இருந்து 40 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது. அதேபோல் வரி தொடர்பான அபராதங்களை செலுத்த 20 நாட்களில் இருந்து 40 நாட்களாக கால அவகாசம் அளிக்கும் சட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் அமீரகத்தின் பல்வேறு துறைகளின் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com