

அல்பானி,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் மாத வாடகை ரூ.10 லட்சம் என்று இந்திய வம்சாவளி பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பிரபல நிதி ஆலோசகரும் இன்ப்ளூயன்சருமான சரண் ஹெக்டேவுடன், பெண் தொழிலதிபரான குஷி ஜெயின் நடத்திய இந்த நேர்காணல் வீடியோ வைரலாகி வருகிறது. இதில் நியூயார்க்கின் மிக விலையுயர்ந்த பகுதியில் வசிப்பதற்கான செலவுகள் குறித்து அவர் விவரித்துள்ளார். இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் "அவர் சொல்வது உண்மைதான், ஆனால்..." என்ற ரீதியில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் 2 படுக்கையறை கொண்ட (2BHK) பிளாட்டின் மாத வாடகை $10,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 லட்சம்). மன்ஹாட்டனில் இவ்வளவு அதிக வாடகை இருப்பது உண்மைதான் என்றாலும், அங்கு வசிப்பவர்கள் யாரும் முழுத் தொகையையும் தனியாக செலுத்துவதில்லை என்று பயனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பொதுவாக தம்பதியராகவோ அல்லது நண்பர்களுடனோ இணைந்தே இந்த வாடகையைப் பகிர்ந்து கொள்கின்றனர். குஷி ஜெயினும் அந்த அப்பார்ட்மெண்ட்டை தனது பார்ட்னருடன் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க டாலர் மதிப்பை இந்திய ரூபாயாக நேரடியாக மாற்றிப் பார்ப்பது தவறான ஒப்பீடு என்று பல நெட்டிசன்கள் வாதிடுகின்றனர். நியூயார்க் நகரில் வசிப்பவர்களின் வருமானமும் மிக அதிகமாக இருப்பதால், அங்குள்ள வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப இந்த வாடகை நியாயமானதுதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.
நியூயார்க் நகரின் அனைத்து இடங்களிலும் இந்த அளவிற்கு அதிக வாடகை இல்லை என்றும், குஷி ஜெயின் குறிப்பிட்ட தொகை மிகவும் ஆடம்பரமான மற்றும் பிரீமியம் பகுதிக்குரியது என்றும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர். புரூக்ளின் அல்லது குவீன்ஸ் போன்ற பிற பகுதிகளில் $4,000 முதல் $6,000 டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.3,83,560 முதல் ரூ.5,75,340 ரூபாய்) விலையிலேயே நல்ல வீடுகள் கிடைக்கும் என நியூயார்க்வாசிகள் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, நியூயார்க் நகர வாழ்க்கை மற்றும் அதன் ஆடம்பர வீட்டு வாடகைகள் குறித்த இந்த வீடியோ இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.