3 நாள் பயணமாக ஜின்பிங் ரஷியா சென்றார் - உக்ரைன் போரை நிறுத்த புதினுடன் பேச்சுவார்த்தை

சீன அதிபர் ஜின்பிங் 3 நாள் பயணமாக நேற்று ரஷியா சென்றார். உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
image courtesy: Reuters via ANI
image courtesy: Reuters via ANI
Published on

மாஸ்கோ,

ரஷியா-உக்ரைன் போர் ஓர் ஆண்டை கடந்த பிறகும் முடிவின்றி நீண்டு வருகிறது. இந்த போர் அந்த இரு நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருவதோடு ரஷியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா, போர் தொடங்கியதில் இருந்து இதுவரை ரஷியாவுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாறாக ரஷியா மீதான நடவடிக்கைகளை கைவிடும்படி மேற்கத்திய நாடுகளை வலியுறுத்தி வருகிறது.

இதனால் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக சீனா இருப்பதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் சீனா அதை திட்டவட்டமாக மறுக்கிறது. இந்த சூழலில் உக்ரைன் போரில் தனது நிலைப்பாட்டை அண்மையில் தெரிவித்த சீனா, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி திட்டத்தை அறிவித்தது.

இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங் 3 நாள் பயணமாக நேற்று ரஷியாவுக்கு சென்றார். தொடர்ந்து 3-வது முறையாக சீனாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

விமானம் மூலம் ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த ஜின்பிங்குக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின்போது ரஷிய அதிபர் புதினுடன் ஜின்பிங் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அந்த வகையில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக புதினுடன் ஜின்பிங் விவாதிப்பார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷியா செல்வதற்கு முன்பாக ரஷிய பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது ரஷிய பயணமானது உக்ரைன் போர் குறித்த கவலைகளை தீர்க்கும் என்று ஜின்பிங் உறுதி கூறினார். மேலும் இந்த பயணத்தின் மூலம் ரஷியாவுடனான சீனாவின் நட்புறவு மேலும் வலுப்பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com