

சுவா,
தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த 333 தீவுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சிறு தீவு கூட்டங்களை உள்ளடக்கிய பிஜி நாட்டில், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை பருவகால புயல்கள் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. நடப்பு பருவத்தில் பிஜி நாட்டில் இன்னும் 3 சூறாவளி தாக்குதல்கள் நடைபெற கூடும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிஜி தீவில் கடந்த 2 நாட்களாக யாசா என பெயரிடப்பட்ட புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பிஜி நாட்டின் 2வது மிக பெரிய தீவு பகுதியான வனுவா லேவு தீவில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதேபோன்று பிஜியின் மேற்கு பகுதியில் அமைந்த விட்டி லேவு, பா உள்ளிட்ட பகுதிகளும் பாதிப்புகளை சந்தித்து உள்ளன.
இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி இதுவரை மொத்தம் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதுபற்றி பிஜி தீவின் தேசிய பேரிடர் மேலாண் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தீவின் மேற்கு பகுதியில் புயல் பாதிப்புகளால் இருவர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் விட்டி லேவு பகுதியில் 50 வயதுடைய ஒருவரும், பா என்ற பகுதியில் மற்றொருவரும் உயிரிழந்து உள்ளனர்.
தேசிய பேரிடர் மேலாண் அலுவலகம் நேற்று உறுதி செய்த 2 உயிரிழப்புகளுடன் மொத்த பலி எண்ணிக்கை 4 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
தொடர்ந்து, தேசிய பேரிடர் மேலாண் அலுவலகம் ஆனது பாதுகாப்பு படைகள், அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்களை வனுவா லேவு தீவில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக அனுப்பி வைத்துள்ளது.
அந்த குழுக்கள் ரேசன் பொருட்கள் மற்றும் ரேசன் அல்லாத பிற பொருட்களை அந்த பகுதி கிராம மக்கள் மற்றும் சமூகத்தினருக்கு வழங்கும் பணிகளை மேற்கொள்வார்கள். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு தேவையான 10 ஆயிரம் உணவு பொட்டலங்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அவற்றுடன், புயல் பாதிப்பு ஆய்வுகளை அவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.