பல ஆண்டு கால பேரிடர்கள் உலகளாவிய வளர்ச்சியை அழித்து விடும்: பிரதமர் மோடி எச்சரிக்கை

இந்தியா எவ்வளவு பழமையான நாடாக இருந்ததோ அந்தளவுக்கு நவீனத்துவம் அடைந்து வருகிறது என்றும் கூறினார்.
பல ஆண்டு கால பேரிடர்கள் உலகளாவிய வளர்ச்சியை அழித்து விடும்:  பிரதமர் மோடி எச்சரிக்கை
Published on

தி ஹேக்

ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து நாட்டுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடைய வருகையை சிறப்பிக்கும் வகையில், இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை போற்றும் வகையில் இளம் கலைஞர்கள் சார்பில் நடனம், இசை நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டன.

இதன்பின்னர் இந்திய வம்சாவளியினர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்று காலம் முதல். தற்போது நடந்து வரும் உலக நாடுகளின் மோதல்கள் மற்றும் எரிபொருள் நெருக்கடி என தொடர்ச்சியாக உலகம் சவால்களை சந்தித்து வருகிறது என குறிப்பிட்டார். முதலில் கொரோனா பெருந்தொற்று வந்தது. பின்னர் போர்கள் தொடங்கின. தற்போது எரிபொருள் நெருக்கடியும் அதனுடன் சேர்ந்து கொண்டது.

இந்த தசாப்தம், உலகத்திற்கான பேரிடருக்கான தசாப்தம் ஆகி விட்டது என்று பேசினார். இந்த சவால்கள் விரைவாக சரி செய்யப்பட வேண்டும். அப்படி செய்யாவிட்டால், பல தசாப்தங்களாக செய்த சாதனைகள் அனைத்தும் காணாமல் போவதுடன், உலகில் பெருவாரியான மக்கள் தொகையினர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்றும் எச்சரித்து உள்ளார்.

21-ம் நூற்றாண்டில் வாய்ப்புகளுக்கான பூமியாக இந்தியா உள்ளது. தொழில் நுட்பம் மற்றும் மனித மதிப்புகள் என இரண்டு வகையிலும், முன்னோக்கிய தேச பயணத்திற்கு பங்காற்றி வருவதுடன், இந்தியா எவ்வளவு பழமையான நாடாக இருந்ததோ அந்தளவுக்கு நவீனத்துவம் அடைந்து வருகிறது என்றும் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com