ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்: இஸ்ரேல் விமான நிலையம் கடும் சேதம்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய டிரோன்கள் பலவற்றை தங்கள் படையினர் இடை மறித்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
காசா,
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் போர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையிட்ட பிறகும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.ஹமாசுக்கு ஆதரவாக ஏமனில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருந்து வருகின்றனர். இதனால் ஆத்திரத்தில் உள்ள இஸ்ரேல் அவ்வப்போது ஏமன் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் தாக்குதலுக்கு ஹவுதி நிர்வாகத்தின் பிரதமர் அகமது அல்ரஹாவி உள்ளிட்ட முக்கியமானவர்கள் உயிர் இழந்தனர்.இது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹவுதி கிளர்ச்சி யாளர்கள் நேற்று இரவு ஏமனில் இருந்து இஸ்ரேல் எல்லைகள் மீது சரமாரியாக டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
தெற்கு இஸ்ரேலில் செங்கடல் நகரமான ஈலாட் அருகே உள்ள ராமோன் சர்வதேச விமான நிலையத்தை குறி வைத்து டிரோன்கள் ஏவப்பட்டது. இதில் அந்த விமான நிலையம் கடும் சேதம் அடைந்தது. ஒருவர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய டிரோன்கள் பலவற்றை தங்கள் படையினர் இடை மறித்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.






