

பெய்ஜிங்
மூன்றாவது சர்வதேச யோகா தினம் சீனாவில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக பேரளவில் கொண்டாடப்படும் இரண்டாவது பெரிய கொண்டாட்டம் சீனாவில் நடைபெறும் என்று அதிகாரிகள் கூறினர்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் மோடியும், சீனப் பிரதமர் லீ கேகியாங்கும் இணைந்து செய்த யோகா பயிற்சிக்கு பிறகு சீனாவில் யோகா மிகப் பிரபலமடைந்து விட்டது. சீனா இந்தியாவுடன் இணைந்து ஐநா அவையில் ஜூன் 21 ஆம் தேதியில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட ஆதரவளித்தது.
மன்மோகன் சிங் பண்டாரி எனும் இந்தியர் தனது சீன மனைவி யின் யானுடன் இணைந்து யோகா பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். பூங்காக்களில் யோகா கற்றுத்தரப்படுவது சகஜமாக காணப்படும் காட்சியாகும். யோகா சீனா முழுதும் இலவசமாகவே கற்றுத்தரப்படுகிறது. ரிஷிகேசத்திலிருந்து சென்றுள்ள பண்டாரிக்கு சீனா முழுதும் யோகாப் பள்ளிகள் உள்ளன.இந்திய தூதரகத்தில் உமேஷ் பாபு எனும் யோகா சிறப்பு ஆசிரியர் ஒருவர் உள்ளார்.
இந்திய தூதரகம் ஜூன் 20 ஆம் நாள் முக்கிய நிகழ்வை நடத்தவுள்ளது. முதல் முறையாக சீன இளைஞர்கள் சிலருக்கு யோகா பயிற்சியளித்து அவர்களை யோகா தூதர்களாக செயல்பட வைக்கும் முயற்சியும் செய்யப்படுகிறது. தூதரகம் 12 நகரங்களில் 12 நிகழ்ச்சிகளை நடத்தி 20,000 பேரை பங்கேற்க வழிசெய்துள்ளது.
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம் பேர் யோகாவில் இணைய ஆர்வம் கொண்டுள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர்.