

டோக்கியோ
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சமீபத்தில் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். 3 நாட்கள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் அந்நாட்டின் முக்கிய தலைவர்களான, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், வெளிவிவகார துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன், ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.
இதில் பொருளாதார ஒத்துழைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், திறன் மேம்பாடு, நீடித்த வளர்ச்சி, இணைப்பு மற்றும் நவீன உற்பத்தி உள்ளிட்ட விசயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, இரு நாடுகளுக்கான விரிவான மூலோபாய நட்புறவுக்கான செயல் திட்டம் பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோன்று, உத்தர பிரதேசத்திற்கு வர கூடிய முதலீட்டு வாய்ப்புகளை பற்றியும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதில், உத்தர பிரதேசத்தில் முதலீடு மேம்படும் வகையில், சிங்கப்பூரில் இருந்து உத்தர பிரதேசத்திற்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டுக்கான முன்மொழிவுகளை பெற்றிருக்கிறோம் என யோகி ஆதித்யநாத் கூறினார். இதில், ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.
சிங்கப்பூர் பயணம் முடிந்ததும் ஜப்பானுக்கு நேற்று சென்றார். இதில், அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில், ஜப்பானின் யமனாஷி நகரில் மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்ற மேக்லெவ் ரெயிலில் யோகி ஆதித்யநாத் இன்று பயணம் மேற்கொண்டார்.
ரெயிலின் சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக அவரும் பயணிகளுடன் ஒருவராக ரெயிலில் அமர்ந்து பயணம் மேற்கொண்டார். நவீன காந்த உயர்வு தொழில் நுட்பத்தின் அடிப்படையில், அதிக சத்தம் எழுப்பாமல், குறைவான உராய்வுடன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ரெயில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான தொழில்நுட்ப ஒத்துழைப்பை எடுத்து காட்டும் வகையில் இது அமைந்துள்ளது. இந்தியாவில் வருங்கால போக்குவரத்தில் முன்னேற்றம் காணும் வகையில் இதுபோன்ற அதிவேக நவீன ரெயில்களை அறிமுகப்படுத்த கூடிய சூழலுக்கான வாய்ப்பாகவும் இது பார்க்கப்படுகிறது.