“பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்ப நீங்கள்தான் காரணம்” - அமெரிக்கா மீது இம்ரான்கான் பகிரங்க குற்றச்சாட்டு

பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்ப அமெரிக்காவே காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
“பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்ப நீங்கள்தான் காரணம்” - அமெரிக்கா மீது இம்ரான்கான் பகிரங்க குற்றச்சாட்டு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக திகழ்ந்து வருவதாகவும், அந்நாடு பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

மேலும் பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக கூறி அந்நாட்டுக்கு வழங்கி வந்த ராணுவ நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான் தங்கள் நாட்டில் பயங்கரவாத இயக்கங்கள் இல்லை என கூறிவந்தது.

இந்த சூழலில் கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜனாதிபதி டிரம்ப் உடனான சந்திப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, பாகிஸ்தானில் 40 பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும், சுமார் 40 ஆயிரம் பயங்கரவாதிகள் இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார்.

மேலும் தங்கள் மண்ணில் உள்ள பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தங்களுக்கு தொடர்ந்து உதவி அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்ப அமெரிக்காவே முழு காரணம் என இம்ரான்கான் குற்றம் சாட்டி உள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது குறித்து அவர் கூறியதாவது:-

1980-களில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து இருந்த சோவியத்திற்கு எதிராக புனித போர் நடத்த நாங்கள் ஆயுத குழுக்களுக்கு பயிற்சி அளித்தோம். அவர்களுக்கு பயிற்சி அளிக்க அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. எங்களுக்கு நிதியுதவி அளித்து வந்தது.

தற்போது, பாகிஸ்தானில் உள்ள அதே குழுக்கள் ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்துவதால் அவர்களை பயங்கரவாதிகள் என்று, அமெரிக்கா கூறுகிறது. மேலும் அவர்களுக்கு எதிராக அமெரிக்கா செயல்படுகிறது.

இதனால் பயங்கரவாதிகளின் கோபம் பாகிஸ்தான் பக்கம் திரும்பி உள்ளது. பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் 70,000 பேரையும், 100 மில்லியன் டாலர் பொருளாதாரத்தையும் இழந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்கள் தோற்கடிக்கப்படுவதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என அமெரிக்கா பழி சுமத்துகிறது. ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் நடுநிலையாக செயல்படவே பாகிஸ்தான் நினைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இம்ரான்கான் அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவிருக்கும் நிலையில், அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த பயணத்தின்போது இம்ரான்கான், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை 2 முறை சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக பாகிஸ்தான் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com