செடூல் செய்து மெசேஜ் அனுப்பலாம்.. வாட்ஸ் அப்பில் விரைவில் வரும் சூப்பர் அப்டேட்
இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் தகவல் தொடர்பு மிகவும் எளிதாகிவிட்டது. மெசேஜ்கள், தொலைபேசி அழைப்புகள், வீடியோ கால்கள் என உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் எளிதாக தொடர்பு கொண்டு பேச முடிகிறது. அதிலும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தள செயலிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு, தகவல் தொடர்பில் பெரும் புரட்சியே ஏற்பட்டது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தகவல் பரிமாற்றங்கள் எளிதாகிவிட்டன.
வாட்ஸ் அப்பை பொறுத்தவரை உலகம் முழுவதும் 3 பில்லியன் பேர் அதனை பயன்படுத்துகிறார்கள். வெறும் குறுஞ்செய்தி அனுப்புவது மட்டுமின்றி, வீடியோ பைல்கள், இமேஜ்கள், பிடிஎப் உள்ளிட்டவற்றையும் வாட்ஸ் அப்பில் அனுப்ப முடியும். சந்தையில் போட்டியை சமாளிக்கும் வகையில் புதுப் புதுப் அப்டேட்களை வாட்ஸ் அப் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த ஒரு வசதியை விரைவில் வாட்ஸ் அப் அறிமுகம் செய்யும் எனக் கூறப்படுகிறது. அதாவது, வாட்ஸ் அப்பில் சாட்டிங்கை ஷெட்யூல் செய்து அனுப்பும் வசதி கொண்டு வரப்பட உள்ளதாம். தற்போது சோதனை அடிப்படையில் IOS இயங்குதளத்தில் இந்த வசதி பரிசோதிக்கப்பட்டு வருவதாக, வாட்ஸ் அப் அப்டேட்களை முன்கூட்டியே கணிக்கும் ’வா பீட்டா இன்போ ’ தெரிவித்துள்ளது.
பிறந்தநாள் வாழ்த்துகள், முக்கியமான தகவல்களை முன்கூட்டியே ஷெட்யூல் செய்து சரியான நேரத்தில் அனுப்ப முடியும் என்பதால், வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட் பயனர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

