லண்டனில் இந்திய வம்சாவளி வாலிபர் கத்தியால் குத்திக்கொலை

குர்பேஜ் சிங்கின் குடும்பத்தினருக்கு உதவவும், அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வரவும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
லண்டனில் இந்திய வம்சாவளி வாலிபர் கத்தியால் குத்திக்கொலை
Published on

இங்கிலாந்தின் மேற்கு லண்டனில் உள்ள சவுத்தால் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பஞ்சாப் மாநிலம் டார்ன் தரன் மாவட்டத்தின் மெஹ்திபூர் கிராமத்தைச் சேர்ந்த குர்பேஜ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் மேலும் ஒரு வாலிபர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதல் நடந்ததாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், குர்பேஜ் சிங் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டறிந்தனர். இதுதொடர்பாக 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு 6 பேர் எந்த நடவடிக்கையும் இன்றி விடுவிக்கப்பட்டனர். ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், நார்த் ரோடு - டார்மர்ஸ் வெல்ஸ் லேன் சந்திப்புக்கு அருகிலுள்ள ஒரு கடையின் வெளியே குர்பேஜ் சிங் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறும் கேட்டுக்கொண்டனர்.

கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், குர்பேஜ் சிங்கின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கும், அவரது குடும்பத்தினருக்கு உதவுவதற்கும் நிதி திரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குடும்பத்தினர் இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com