

வாஷிங்டன்,
நியூயார்க்கைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தாடிக்காக ரூ.10 லட்சம் செலவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்கைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் அமெரிக்காவின் ஒரு அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கு இயல்பாகவே தாடி சரியாக வளரவில்லை. இதனால் அவருக்கு எப்போதுமே மிகவும் இளமையான முகத்தோற்றம் இருந்தது. அந்த தோற்றத்தால் தனது தொழில் வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக அவர் உணர்ந்தார்.
இது குறித்து அந்த இளைஞர் கூறுகையில், "என்னுடைய குழந்தைத்தனமான தோற்றத்தால் அலுவலகத்தில் சக ஊழியர்கள் என்னை ஒரு விபரமறியாத சிறுவனைப் போலப் பார்த்தார்கள். என்னை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
என்னை விடக் குறைந்த அனுபவம் கொண்டவர்கள், தாடி மற்றும் முதிர்ச்சியான தோற்றம் இருந்த காரணத்தால் பதவி உயர்வுகளைப் பெற்றார்கள். வாடிக்கையாளர்களும் என்னை கொஞ்சம் கூட மதிக்கவில்லை" எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாழ்வு மனப்பான்மையால் அவதிப்பட்ட அவர், இறுதியாக ஒரு முடிவை எடுத்தார். அதன்படி, இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 லட்சம் ($10,000) செலவு செய்து, "தாடி மாற்று அறுவை சிகிச்சை" செய்து கொண்டார்.
அறுவை சிகிச்சைக்குப் பின் அடர்த்தியான தாடியுடன் இருக்கும் அந்த இளைஞர், தற்போது தனது தோற்றம் முற்றிலும் மாறிவிட்டதாக மகிழ்ச்சியுடன் கூறினார். "இப்போது அலுவலகத்தில் எனக்கு உரிய மரியாதை கிடைக்கிறது. இழந்த எனது தன்னம்பிக்கை மீண்டும் கிடைத்துவிட்டது. நான் செலவழித்த ஒவ்வொரு பைசாவிற்கும் இந்த தாடி தகுதியானதுதான்" என அவர் நெகிழ்ச்சியுடன் வீடியோவில் தெரிவித்தார். தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி விவாதப் பொருளாக மாறியுள்ளது.