சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம்

சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
பீஜிங்,
சீனாவின் சிச்சுவான் மாகாணம் ஜியான்யாங் நகரில் பிரபல ஓட்டல் ஒன்று செயல்படுகிறது. இதற்கு நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் அந்த ஓட்டலின் ஷாங்காய் கிளைக்கு 2 வாலிபர்கள் சென்றிருந்தனர்.
மதுபோதை தலைக்கேறிய நிலையில் ஓட்டலின் மேஜை, பாத்திரங்களில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்தனர். மேலும் அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களிலும் பதிவிட்டனர். வீடியோ வைரலான நிலையில் ஓட்டலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு சாப்பிட்ட ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு 10 மடங்கு அதிக பணத்தை ஓட்டல் நிர்வாகம் வழங்கியது. பின்னர் நஷ்ட ஈடு கோரி ஓட்டல் நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் வாலிபர்கள் 2 பேரும் ஓட்டல் நிர்வாகத்துக்கு சுமார் ரூ.3 கோடி அபராதமாக செலுத்த வேண்டும் என ஷாங்காய் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.






