வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்தல்: முகம்மது யூனுஸ் அறிவிப்பு

ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது.
டாக்கா,
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
தொடர்ந்து, ராணுவத்தின் கண்காணிப்பில் முகமது யூனுஸ் இடைக்கால தலைவராக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இடைக்கால அரசு அங்கு அமைந்தது. அங்கு இந்தாண்டு டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவ தலைவர் வேக்கர் உஸ்ஜமான் அழைப்பு விடுத்திருந்தார்.
ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் ஒரே பெரிய கட்சியான வங்கதேச தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தேர்தலை உடனே நடத்தாமல் தாமதிப்பதாக யூனுஸ் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த நிலையில், வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று முகம்மது யூனுஸ் அறிவித்துள்ளார்.






