

கோலாலம்பூர்,
இந்தியாவில், தனது வெறுக்கத்தக்க பேச்சுகளின் மூலம் தீவிரவாதத்தை தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில், இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகீர் நாயக் மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்துமாறு இந்திய அரசாங்கம் விடுத்த கோரிக்கையை கடந்த ஆண்டு மலேசிய அரசாங்கம் நிராகரித்தது.
சமீபத்தில், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரை விட தென்கிழக்கு ஆசிய நாட்டில் இந்துக்களுக்கு "100 மடங்கு அதிக உரிமைகள்" இருப்பதாக ஜாகீர் நாயக் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை எழுப்பியது. மேலும் சீனர்கள் குறித்து, அவர்கள் மலேசியாவின் பழைய விருந்தாளிகள் என்று கூறியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
ஜாகீர் நாயக் மீது கடும் விமர்சனம் எழுந்த நிலையில், மலேசியாவின் 7 மாநிலங்களில் அவர் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது பொது இடங்களில் ஜாகீர் நாயக் கூட்டம் நடத்துவதற்கும் அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. மேலும் அவர் கூறிய கருத்து தொடர்பாக மலேசிய போலீசார் ஜாகீர் நாயக்கிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து தனது கருத்து முற்றிலுமாக திரித்து கூறப்பட்டுள்ளதாக ஜாகீர் நாயக் கூறியுள்ளார். இது குறித்து மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்த பேச்சுகளால் என்னை இனவாதியாக நினைக்க கூடிய நிலை வந்தது குறித்து நான் வருந்துகிறேன். எனது முந்தைய பேச்சுகளை கேட்காதவர்கள் தற்போது என் மீது தவறான எண்ணம் கொண்டிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
நான் கூறிய கருத்துகள் சில பேரால் திரித்து கூறப்பட்டுள்ளது. எந்த ஒரு சமூகத்தினரையோ அல்லது தனி நபரையோ இழிவாக பேச வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. இருப்பினும் இந்த சம்பவத்தின் மூலம் யார் மனதாவது புண்பட்டிருக்குமானால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.