ஜாம்பியாவில் நிலச்சரிவு... சுரங்கங்களில் புதைந்த தொழிலாளர்கள்

நுழைவு வாயில்கள் வழியாக வெள்ளம் புகுந்தது. இதனால் சுரங்கத் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
ஜாம்பியாவில் நிலச்சரிவு... சுரங்கங்களில் புதைந்த தொழிலாளர்கள்
Published on

லுசாகா:

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் தலைநகர் லுசாகாவில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள சிங்கோலா நகரில் வியாழக்கிழமை இரவு கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் அங்குள்ள திறந்தவெளி தாமிர சுரங்கங்கள் இடிந்து விழுந்தன. நுழைவு வாயில்கள் வழியாக வெள்ளம் புகுந்தது. இதனால் சுரங்கத் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். அப்பகுதியில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தொழிலாளர்களில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 பேரைக் காணவில்லை. அவர்களும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என கருதப்படுகிறது. இறந்தவர்களின் உடல்கள் எதுவும் இதுவரை மீட்கப்படவில்லை.

எத்தனை பேர் சுரங்கப்பாதைகளில் சிக்கியிருக்கிறார்கள்? என்ற சரியான விவரமும் வெளியாகவில்லை. ஆனால், குறைந்தபட்சம் 36 பேர் சுரங்கப்பணியில் ஈடுபட்டிருக்கலாம் என சிங்கோலா மாவட்ட கமிஷனர் தெரிவித்திருக்கிறார்.

தாமிர தாதுக்களை வெட்டி எடுப்பதற்காக சுரங்க உரிமையாளர்களுக்கு தெரியாமல் சட்டவிரோதமாக இந்த தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் சுரங்கம் தோண்டியதாகவும், அவர்கள் 3 வெவ்வேறு சுரங்கப் பாதைகளில் சிக்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

சுரங்க விபத்து குறித்து கேள்விப்பட்ட ஜாம்பியா அதிபர், தனது கவலையை தெரிவித்துள்ளார். மேலும், சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் பகுதியை சென்றடைவதற்காக அயராது உழைக்கும் மீட்புப் பணியாளர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com