முழுமையான போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் தயார்: ரஷிய அதிபர் புதினுக்கு ஜெலன்ஸ்கி கடிதம்

உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வை எட்ட ரஷியா தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதினும் தெரிவித்துள்ளார்
முழுமையான போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் தயார்: ரஷிய அதிபர் புதினுக்கு ஜெலன்ஸ்கி கடிதம்
Published on

நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு உக்ரைன் ஆர்வம் காட்டியதால் கோபம் அடைந்த ரஷிய அதிபர் புதின், அந்த நாட்டின் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தார். 4 ஆண்டுகள் ஆகியும் இரு நாடுகளுக்கும் இடையேயான யுத்தம் நீடித்துக்கொண்டே வருகிறது. போர் நிறுத்தம் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும் உக்ரைன் - ரஷியா இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

தீவிர தாக்குதல்

உக்ரைனின் சில பகுதிகளை கைப்பற்றிய ரஷியா தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீதான தனது வான்வழித் தாக்குதல்களை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆம் தேதி நள்ளிரவு முதல் அதிகாலை வரை, கீவ், டினிப்ரோ, போல்டாவா, கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து 73 ஏவுகணைகளையும், 656 ஆளில்லா விமானங்களையும் ஏவி ரஷியா தனது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

குறிப்பாக, கீவ் நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் 60 விநாடிகளுக்குள் 4 அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகள் அடுத்தடுத்து விழுந்து வெடித்தன. இந்த தாக்குதலில் 22-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள சூழலில், புதினுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம் எழுதியுள்ளார்.

ரஷியா தயார்

அதில், முழுமையான போர் நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாகவும் புதினை நேரடியாக சந்தித்து பேச தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இருநாடுகளும் போர்க்கைதிகளை பரிமாறிக்கொள்ள வேண்டுமெனவும் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே, உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வை எட்ட ரஷியா தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதினும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், போர்க்களத்தில் நிலவும் யதார்த்தங்களை உக்ரைன் ஏற்றுக்கொண்டு சில சமரசங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து புதின் கூறுகையில், “உக்ரைனுடன் அமைதியான முறையில் ஒப்பந்தம் செய்து கொள்ள ரஷியா தயாராக உள்ளது. பேச்சுவார்த்தைகளுக்கு தொடர்ந்து திறந்த மனதுடன் ரஷியா உள்ளது” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com