டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ரஷியாவின் எண்ணெய் நிறுவனங்கள் மீது நடத்தி வரும் தாக்குதலுக்காக உக்ரைனை கண்டித்திருந்த டிரம்ப், இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் பற்றாக்குறை நிலவுவதாகவும் சாடியிருந்தார்.
ஜெலன்ஸ்கி
Published on: 

உக்ரைன்-ரஷியா இடையேயான போர் எந்தவித பினனடைவும் இன்றி தொடர்கிறது. இரு தரப்பும் முக்கிய உள்கட்டமைப்புகளை மாறிமாறி தாக்கி வருகின்றன. இந்த சூழலில் இரு நாடுகளும் எரிசக்தி போர் நிறுத்தம் செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து இருந்தார். அதேநேரம் ஒப்பந்த விதிகள் எதையும் அவர் விவரிக்கவில்லை.

முன்னதாக ரஷியாவின் எண்ணெய் நிறுவனங்கள் மீது நடத்தி வரும் தாக்குதலுக்காக உக்ரைனை கண்டித்திருந்த டிரம்ப், இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் பற்றாக்குறை நிலவுவதாகவும் சாடியிருந்தார். இதன் தொடர்ச்சியாக இரு தரப்பும் எரிபொருள் கட்டமைப்புகளை தாக்காமல் இருக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார்.

எனினும், சில மணி நேரங்களில் ரஷியா மீது ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் உக்ரைனின் மின்சார உற்பத்தி மற்றும் மின் பரிமாற்றக் கட்டமைப்புகள் மீது ரஷியா 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் குறித்து டிரம்பின் அறிவிப்பு தனக்கு புதிதாக இருப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்து இருந்தார். ரஷியா ஒப்புக்கொண்டால் உக்ரைனும் போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்கும் என்றும் கூறியிருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com