‘பூஜ்ய கொரோனா கொள்கை’ - சீனாவின் அதிரடி கொரோனா தடுப்பு நடவடிக்கை

‘பூஜ்ய கொரோனா கொள்கை’ என்ற அடிப்படையில் சீன அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
‘பூஜ்ய கொரோனா கொள்கை’ - சீனாவின் அதிரடி கொரோனா தடுப்பு நடவடிக்கை
Published on

பெய்ஜிங்,

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. உருமாறிய கொரோனா காரணமாக இந்த தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சீன அரசு பூஜ்ய கொரோனா கொள்கை (Zero Covid policy) என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது. அதாவது சீனாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதற்காக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த திட்டங்கள் பலன் அளித்த காரணத்தால் சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்தது.

சர்வதேச பயணத்தை தடை செய்வது, பொருளாரம் மற்றும் வணிக ரீதியிலான தொடர்புகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டதால், சீன அரசின் நடவடிக்கைக்கு சில கண்டனங்களும் எழுந்தன. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால், கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சீன அரசு ஆலோசித்து வந்தது.

இந்நிலையில் அங்கு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், பூஜ்ய கொரோனா கொள்கை அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என அந்நாட்டு சுகாதாரத்துறை ஆணையத்தின் இணை மந்திரி வான் ஹென்செங் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள இடங்களை தீவிரமாக கண்காணித்து, அங்கிருந்து வேறு இடங்களுக்கு தொற்று பரவாத வகையில் தடுப்பதன் மூலம், முடிந்த அளவு விரைவாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் சீன அரசு சர்வதேச பயணத்திற்கு விதித்திருக்கும் தடைகள் காரணமாக, வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் சீனாவில் தங்கள் கல்வியை தொடர்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய மாணவர்கள் சுமார் 23 ஆயிரம் பேர் சீனாவில் இருந்து கொரோனா ஊரடங்கு காலத்தில் தாயகம் திரும்பினர். சீன அரசு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் சீனாவில் தங்கள் கல்வியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com