

துபாய்,
அமெரிக்கா இஸ்ரேல், ஈரான் இடையே நடந்து வரும் போர் காரணமாக, ஈரான், அமீரகம், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் 15-வது நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்த ஒலிகள் எழும்பின. வான் பாதுகாப்பு அமைப்புகள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிப்பதாலும், அமீரக போர் விமானங்கள் டிரோன்கள் மற்றும் கடல்சார் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதாலும் இந்த ஒலிகள் ஏற்படுகிறது என பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
நேற்று ஒரே நாளில் ஈரானின் 9 ஏவுகணைகள் மற்றும் 33 டிரோன்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 294 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 கடல்சார் ஏவுகணைகள் மற்றும் 1,600 டிரோன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்த இடைமறிப்பு சம்பவங்களில் மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 141 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்தாலும் விமான பாதுகாப்பு படையினர் இந்த தாக்குதல் முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரானின் தாக்குதலை புகைப்படம் மற்றும் வீடியோ, எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அபுதாபி போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
அபுதாபியில் ஏவுகணை தாக்குதல் நடந்த இடத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 45 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தவறான வீடியோ, புகைப்படங்களை பரப்ப வேண்டாம். சட்டத்துக்கு எதிரான செயல்களில் ஈடு பட வேண்டாம்.
விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அரசின் அதிகாரபூர்வமான தகவலை மட்டும் பின்பற்ற வேண்டும். சமூகத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த வேண்டியது ஒவ்வொரின் சமூக பொறுப்பாகும். பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.