

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் லட்சிய திட்டத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மீண்டும் முன்னெடுத்துள்ளது. பல கட்ட சோதனைகளுக்கு பிறகு ஆர்டெமிஸ்-2 திட்டத்தை நாசா வெற்றிகரமாக செயல்படுத்தியது. கனடா நாட்டின் விண்வெளி வீரர் உள்பட 4 வீரர்கள் அடங்கிய இந்த குழுவினர் ஒரு நாள் முழுவதும் பூமியைச் சுற்றி வந்து விண்கலத்தின் உயிர் காக்கும் வசதிகளைச் சோதித்தனர்.
பின்னர், 'டிரான்ஸ்லூனார் இன்ஜெக்ஷன்' என்ற என்ஜின் எரிப்பு மூலம் நிலவை நோக்கிச் செலுத்தப்பட்டனர். இவர்கள் நிலவின் மறுபக்கத்தை மிக நெருக்கமாகவும், நேரடியாகவும் காணும் முதல் மனிதர்கள் என்ற சாதனையைப் படைக்க உள்ளனர். இந்த ஒட்டுமொத்த திட்டத்தின் மதிப்பு ரூ.8.64 லட்சம் கோடி ஆகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் 2028-ல் திட்டமிடப்பட்டுள்ள மனிதர்களின் நிலவுத் தரையிறக்கத்துக்கு (ஆர்டெமிஸ் 4) ஒரு முன்னோட்டமாக அமையும்.
ஆர்டெமிஸ் 2 எனும் விண்கலம் நான்கு விண்வெளி வீரர்களுடன், கடந்த 2 ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து புறப்பட்டது. இன்று காலை நிலவரப்படி நிலவின் வட்டப்பாதையை ஆர்டெமிஸ் நெருங்கியுள்ளது. இன்று இரவு நிலவின் மறுபக்கத்திற்கு ஓரியன் விண்கலம் செல்ல உள்ளது. நிலவை நெருங்கி செல்லும் நேரத்தில் விண்வெளி வீரர்கள் நிலவின் தரைப்பகுதியில் என்ன உள்ளது என்பதை ஆய்வு செய்ய உள்ளனர்.