சத்தான உணவும் மகத்தான வாழ்வும்

ஆரோக்கியமான வாழ்வு வாழ அனைத்து விதமான சத்துக்களையும், வைட்டமின்களையும் நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். உடல் நலம் தான் அனைத்து செல்வங்களையும் விட உயர்ந்த செல்வமாகும்.
சத்தான உணவும் மகத்தான வாழ்வும்
Published on

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது

நோய் நொடிகள் இன்றி வாழ்தல் அதினினும் அரிது"

ஒரு மனிதன் நோயற்ற வாழ்வு வாழவேண்டுமெனில் அவனுக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்வு வாழ அனைத்து விதமான சத்துக்களையும், வைட்டமின்களையும் நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். உடல் நலம் தான் அனைத்து செல்வங்களையும் விட உயர்ந்த செல்வமாகும். மற்ற செல்வங்களை பெறவும் பெற்ற செல்வங்களை அனுபவிக்கவும் உடல்நலம் மிக அவசியமாகிறது. உடலை நலமாக பேண ஊட்டச்சத்து மிக அவசியமானதாக காணப்படுகிறது. ஊட்டச்சத்தை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.

உணவும் ஆரோக்கியமும்

"உணவே மருந்து" என்று நம் முன்னோர்கள் குறிப்பிடுவார்கள். மனிதனுடைய ஆரோக்கியம் அவன் உண்ணுகின்ற உணவிலேயே தங்கியுள்ளது.

"உணவெனப்படுவது நிலத்தொடு நீரே" நிலத்தினை நீரானது எவ்வாறு வளப்படுத்துகின்றதோ அதைப்போல உணவும் மனிதனுடைய உடலை ஆரோக்கியமானதாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

"உடலினை உறுதிசெய்" என்பது அவ்வை மொழி. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மனிதனுக்கு உடல் ஆரோக்கியத்தையும், மனவலிமையையும் ஏற்படுத்தும்.

போஷன் மா திட்டம்

பாரத பிரதமரால் 2018-ம் ஆண்டு போஷன் மா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஊட்டச்சத்து குறைபாடுகளை குறைத்து, அனைவருக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை கிடைக்க வழிவகை செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். போதிய ஊட்டச்சத்து இன்றி உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.

நோயற்ற வாழ்வின் அவசியம்

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. "உடம்பார் அழியின் உயிரார் அழிவார்" என்பது திருமூலர் கூற்று. "உடலில் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவர்" என்பது கவிமணி வாக்கு. நோயில்லா வாழ்வே வாழ்வு. நோயுடைய வாழ்வு எத்தன்மையாதாயினும் அது வாழ்வாகாது. உடலின் உறுதியே உயிருக்கு உறுதியாகும். மிக மகிழ்வுடன் நீண்டநாள் வாழவும், சிந்திக்கவும், கற்கவும், செயலாற்றவும், இவ்வுலக நலன்களை நுகரவும் உடல்நலத்துடன் வாழ்வது அவசியமாகும்.

"மருந்தென வேண்டாமாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்".

என்பது பொய்யாமொழி புலவரின் அமுதமொழி. முன்பு உண்ட உணவு செரித்ததை அறிந்து நல்ல ஊட்டச்சத்துக்களை உண்பவர்களுக்கு மருந்தென ஒன்று தேவையே இல்லை.

ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வோம்! நோயற்ற வாழ்வு வாழ்வோம்!!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com