

கடந்த 2024-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பிரியாத்தி (வயது 83) என்பவர் தனது மகனான பாலமுருகன்(38) என்பவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று, பிரியாத்தி என்பரை குற்றவாளி என தீர்ப்பளித்து, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானபிரகாசம் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு துரிதமாக விசாரணை மேற்கொண்டு கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.