அம்பேத்கர் சிலையை அகற்ற உத்தரவு: ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

கோலார் தங்கவயல் அம்பேத்கர் பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலை, முன்னாள் எம்.எல்.ஏ. சி.எம்.ஆறுமுகம் சிலை மற்றும் அவரது சமாதியை அகற்றும்படி ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்ய நகரசபை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்பேத்கர் சிலையை அகற்ற உத்தரவு: ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
Published on

கோலார் தங்கவயல்:

சிறப்பு கூட்டம்

கோலார் தங்கவயல் நகரசபையில் அனைத்து கவுன்சிலர்கள் அடங்கிய அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர் கலந்துகொண்டார். கூட்டத்தில் ராபர்ட்சன்பேட்டை அம்பேத்கர் பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலை, முன்னாள் எம்.எல்.ஏ. சி.எம். ஆறுமுகம் சிலை மற்றும் அவரது சமாதியை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டிருப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ., ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யவேண்டியது பற்றி கவுன்சிலர்கள் கருத்துக்களை கூறவேண்டும் என்றார். அப்போது கவுன்சிலர்கள், ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் சிலைகளை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க அவகாசம் அளித்து கோலார் தங்கவயலுக்கு அவப்பெயரை ஏற்படுத்தகூடாது என்று கூறினார்கள்.

ஒருமனதாக தீர்மானம்

அதன் பின்னர் கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்வது என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- ஒட்டு மொத்த கவுன்சில் கூட்டத்தில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்வதென்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சட்ட போராட்டம் நடத்தி அம்பேத்கரின் சிலை பாதுகாத்து அவரது கவுரவத்தை காப்போம் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com