

மங்களூரு: மங்களூருவில், விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அந்த வாலிபரின் இதயம் விமானத்தில் பறந்து பெங்களூருவுக்கு வந்தது.
மூளைச்சாவு
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா புஞ்சலகட்டே அருகே மூர்ஜே கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(வயது 32). இவர் கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கினார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சதீஷ் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சதீஷ் மூளைச்சாவு அடைந்தார்.
இதுபற்றி அறிந்த சதீசின் குடும்பத்தினர் அவரது உடலை தானமாக கொடுக்க முன்வந்தனர். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் சதீசின் இதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டது.
ஜீரோ போக்குவரத்து
இதில் இதயம் பெங்களூரு மணிப்பால் மருத்துவமனைக்கும், கல்லீரல் பெங்களூரு ஒசூர் ரோட்டில் உள்ள நாராயண ஹிருதாலயா மருத்துவமனைக்கும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. உடுப்பி மணிப்பால் மருத்துவமனைக்கு ஒரு சிறுநீரகமும், மங்களூரு தேரளகட்டேயில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஒரு சிறுநீரகமும் அனுப்பி வைக்கப்பட்டது.
உடல் உறுப்புகள் 3 ஆம்புலன்சுகளில் எடுத்து செல்லப்பட்டது. இந்த ஆம்புலன்சுகள் தடையின்றி செல்ல போலீசார் ஜீரோ போக்குவரத்து சேவை அமல்படுத்தி இருந்தனர்.