

காசியில் இருந்து திரும்பும் முன்பே சிவலிங்க பூஜையை தொடங்கி அது பூர்த்தியடையும் நிலையில் இருப்பதை பார்த்த அனுமன் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய நினைத்து ராம லிங்கத்தை தன் வாலால் கட்டி இழுத்தார். அப்போது வால் அறுந்து வடக்கே சென்று விழுந்தார். வால் அறுந்து விழுந்த இடம் இன்று அனுமன் நல்லூர் என்று வழங்கப்படுகிறது.
அனுமனின் கோபத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த ராமன், என் பிரியமானவனே! இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 107 சிவலிங் கங்களை பக்தர்கள் வழிபட்டாலும், 108வது சிவலிங்கமான அனுமந்த லிங்கத்தையும் வழிபட்டு, பின்னர் அம்பாளை வழிபட்டால் தான் முழுபலன் கிடைக்கும். தோஷம் நீங்கப்பெறும் என்றார். தோஷம் அகல காரணமான இத்தலம் பாபநாசம் என்று அழைக்கப்படும் என்று அருளினார்.
ராமபிரானின் தோஷம் நீங்கப்பெற்ற இத்திருத்தலத்துக்கு வந்து இங்குள்ள ராமலிங்கத்தையும், சனி பகவானையும் வழிபட்டால் அனைவரின் தோஷம் விலகி வாழ்வில் வளம் பெறலாம் என்று தலபுராணம் கூறுகிறது.
விழாக்கள்
மகாசிவராத்திரி இந்த கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும். அன்று இரவு 4 கால பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.
ஆடிப்பூரம், நவராத்திரி, கார்த்திகை தீபம், திருவாதிரை உற்சவம், சனிப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகியவை இங்கு விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களாகும்.
இத்தலத்தின் தல விருட்சம் வில்வமரம். தீர்த்தம் சூரியதீர்த்தம். தை மாதம் முதல் தேதி பொங்கல்அன்று சுவாமி தீர்த்தவாரி நடைபெறுகிறது. மேலும் மார்கழியில் திருவாதிரையில் நடராஜப்பெருமான், சிவகாமி அம்மையாருடன் வந்து தீர்த்தம் அருளுகிறார். பிரசித்திப்பெற்ற இந்தகோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து மேற்கே 15 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
செந்தூர் திருமாலன்
சூரியன், சனி சாபம் நீக்கிய தலம்
அனுமன் காசியில் இருந்து எடுத்து வந்த சிவலிங்கம் கோவிலின் தென்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வசிஷ்ட முனிவர் காசியில் இருந்த லிங்கம் ஒன்றை காணவில்லை என்பதை அறிந்து சூரிய பகவானிடம் கேட்டார். அதற்கு அவர், தான் பார்க்கவில்லை என்று கூறினார். அதை நம்ப மறுத்த முனிவர் சூரியனுக்கு சாபமிட்டார். சாபம் நீங்குவதற்கு சூரியன் கண்டியூரிலுள்ள அரசாப விமோசன பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபட பாதி சாபம் நீங்கப் பெற்றது. பின்னர் ஐயாறப்பர் சுவாமியின் வழிகாட்டுதலால் பாபநாசத்துக்கு வந்து வழிபட சூரிய பகவானின் முழு சாபமும் நீங்கியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
சூரியனுக்கு சாபமிட்டு கோபத்துடன் வசிஷ்ட முனிவர் வரும் போது, அங்கிருந்த அரசமரத்தில் காக உருவில் இருந்த சனீஸ்வர பகவான் சிரித்தார். முனிவர் அவரிடம் எதற்காக சிரித்தாய்? என்று கேட்க, அதற்கு சனீஸ்வரன், ஒரு குரங்கு லிங்கத்தை பெயர்த்து எடுத்து சென்றது என்று கூறினார். இதனால் கோபம் அடைந்த முனிவர், இதுவரை உண்மையைக் கூறாமல் மறைத்த காரணத்தால் சனி பகவானுக்கும் சாபம் கொடுத்தார்.
சனி பகவானும் தன்னுடைய சாபம் தீர கண்டியூர் அரசாப விமோசன பெருமாள் ஆலயத்துக்கு வந்து தரிசித்து பாதி சாபம் நீங்கப்பெற்றார். பின்னர் ஐயாறப்பர் வழிகாட்டுதலின் பேரில் பாபநாசத்துக்கு வந்து வழிபட்டதும், முழு சாபமும் நீங்கியது. ராமபிரானின் உத்தரவுபடி இக்கோவிலின் கிழக்குபகுதியில் சூரியபகவான் அருகே சனீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.