கைரேகை அற்புதங்கள் : பிறரை எடைபோடும் திறன்

நவக்கிரகங்களில் ராகு- கேது ஆகிய இரு கிரகங்களும் ஒரு வித்தியாசமான கிரகங்கள். இரண்டும் நிழல் கிரகங்கள். இரண்டு கிரகங்களும், சூரியனை 180 டிகிரியில் சுற்றி வருவார்கள்.
கைரேகை அற்புதங்கள் : பிறரை எடைபோடும் திறன்
Published on

கேது- மனிதனுக்கு ஞானத்தைக் கொடுப்பவர். ராகு- மனிதனுக்கு செல்வத்தைக் கொடுப்பவர். ஒருவரது ஜாதகத்தில் லக்னம், 2, 5, 9, 10, 11 ஆகிய இடங்களில் கேது இருந்தால், அந்த நபர் இறையுணர்வு அதிகம் உள்ளவராக இருப்பார். கேது, சந்திரனுடன் சேர்க்கைப் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு சித்த பிரம்மை ஏற்பட வாய்ப்புஉண்டு. அதே வேளையில் கேது, சந்திரனுடன் புதனும் வலிமை இன்றி அமைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு மன நோய் உண்டாவது உறுதி.

கேது தான் சேர்ந்து இருக்கும் கிரகத்தின் தன்மையை தன்னுடன் சேர்த்துக் கொண்டு பலன் கொடுப்பார். லக்னத்தில் கேது பலமுடன் இருந்தால், அந்த ஜாதகர் ஒரு சிவ பக்தனாக திகழ்வார். கணபதியை வணங்கி வருபவர்களுக்கு, கேதுவின் கெடு பார்வை குறையும். மேலும் லக்னத்தில் கேது பலமுடன் அமர்ந்து, அதன் மீது குரு பார்வை செய்தால், அந்த நபர் ஒரு சிறந்த ஜோதிடராகும் நிலை உண்டு. வேதம், விஞ்ஞான அறிவு, திடீர் அதிர்ஷ்டம் போன்றவை வாழ்க்கையில் உண்டாகும்.

குறிப்பாக கேது தசை காலமான ஏழாண்டு காலத்தில், இந்த நிலை உண்டாவது உறுதி. மேலும் முன்பின் தெரியாத ஒருவரை கண்டவுடன், அவர் எப்படிப்பட்டவர் என்பதை எடைபோடும் திறன் இருக்கும். அப்படி பிறரை எடைபோட்டுக் கூறும் விஷயங்கள் மிகவும் சரியானதாக இருக்கும். எப்படி இவ்வளவு சரியாக சொன்னீர்கள்? என்று கேட்டால், சரியான விளக்கத்தை அளிக்காமல் நழுவுவார்கள்.

இனி கைரேகைப்படி ராகு- கேது பற்றி ஆராயலாம். புத்தி ரேகையின் அடியில், விதி ரேகை, சனி மேட்டுக்குச் செல்லும் ரேகையின் அடிப்பாகம் தான் ராகு மேடு. இந்த மேடு உப்பலுடன் அமைந்து, அதில் ஒரு நட்சத்திரக்குறி அமைந்தவர், தன் வாழ்நாளில் கோடீஸ்வரர் ஆவது உறுதி. எதிர்பார்த்த அதிர்ஷ்டம், பூமி விற்பனையில் எதிர்பார்த்த அமோக விலை போன்ற பலன்களை ராகு கொடுப்பார். விதி ரேகையின் அடிப்பாகம் தான் கேது மேடு. இந்த மேடு பலமாக அமைந்தவர் வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்வாள். வங்கியில் பெரும் தொகை இருப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். எளிதில் அந்த தொகை கரையாது.

-கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com