கைரேகை அற்புதங்கள் : தர்ம காரியம் செய்பவர்கள் யார்?

‘தர்மம் தலை காக்கும்’ என்பார்கள். தர்மம் செய்யும் மனப்பான்மை எல்லாருக்கும் இருப்பதில்லை.
கைரேகை அற்புதங்கள் : தர்ம காரியம் செய்பவர்கள் யார்?
Published on

ஒருவர் மகாபாரத கர்ணனைப் போன்று பெரிய கொடை வள்ளலாக இருக்க வேண்டாம். ஆனால் சிறிதளவாவது தர்மம் செய்யும் குணம் இருந்தால் தான், அந்த மனிதனுக்கு தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 12-ம் வீட்டில் புதன் அமையப்பெற்றவர், கண்டிப்பாக தர்ம காரியங்களில் பொருளுதவி செய்யும் எண்ணம் கொண்டவராக இருப்பார் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. குறிப்பாக 12-ம் வீட்டில் புதன் ஆட்சி பலமோ, உச்ச பலமோ இருந்தால் அல்லது வர்க்கோத்தம அம்சமாக இருந்தால் அந்த ஜாதகருக்கு இயற்கையாகவே தர்ம காரியங்களுக்கு பொருளுதவி செய்வதில் ஆர்வம் இருக்கும். அதன் மூலம் அவருக்கு தெய்வ பலம் உண்டாவதும் நிச்சயம்.

ஜோதிடத்தில் 12-ம் வீடு மறைவு ஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஒருவரது ஜாதகத்தில் 12-ம் வீடு மற்றும் 3, 6, 8 ஆகிய வீடுகள், மறைவு பெற்ற வீடுகள் என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது. அதே நேரம் மறைவு பெற்ற இடத்தில் புதன் இருந்தாலும், அந்த நபருக்கு தர்ம காரியங்கள் செய்யும் அளவுக்கு ஏதாவது ஒரு விதத்தில் புதன் பகவான் பொருளைக் கொடுத்துக் கொண்டே இருப்பார் என்றும் ஜோதிட சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. ஒருவருக்கு வாழ்வு தருகிற வசதியை, மறைந்த ஸ்தானத்தில் இருந்தாலும் புதன் தந்து கொண்டே இருப்பார்.

புதன் பலம் பெற்று அமைந்த ஜாதகர், சிறந்த பண்புகள் நிறைந்தவராகவும், சமூகத்தில் உயர்ந்த நிலையிலும் இருப்பார். அவருக்கு தெய்வீக விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். ஒருவரது ஜாதகத்தில் 12-ம் வீட்டில் புதன் இருந்து, அதுவும் பலம் பெற்றிருந்தால் அந்த நபர் தர்ம காரியங்கள் செய்து புகழ் சேர்ப்பார். அவருக்கு மகாவிஷ்ணுவின் பரிபூரண அருள் எப்போதும் இருக்கும்.

இனி கைரேகைப்படி தர்ம காரியங்களுக்கு பொருளுதவி செய்பவர் யார்? என்பதைப் பார்க்கலாம். மனிதனின் சுண்டு விரலுக்கு அடிப்பாகம் தான் புதன் மேடு என்று, கைரேகை சாஸ்திரம் குறிப்பிடுகிறது. புதன் மேட்டில் செங்குத்து ரேகை அமைந்தவருக்கு அளவற்ற செல்வம் உண்டாகும். கையில் அமைந்த புதன் மேடு உப்பலாகவும், ரோஜா வண்ணத்திலும் அமையப் பெறுவது சிறந்த யோகம். அந்த நபர் திருமாலை வணங்கும் குணம் கொண்டவராகவும், தாய்மாமனுக்கு பிரியமானவராகவும் திகழ்வார். அதே நேரம் புதன் மேடு பலம் இல்லாமல் இருந்தால், அந்த நபருக்கு நரம்பு தளர்ச்சி உண்டாக வாய்ப்புண்டு. சூரிய மேட்டுடன் சேர்ந்தது போல் புதன் மேடு அமைந்திருந்தால், அந்த நபர் சாதாரண மனிதனாகப் பிறந்து, தன் வாழ்நாளில் பெரும் புகழை சேர்ப்பார். நிறைய தான தர்மங்களைச் செய்வார் என்கிறது கைரேகை சாஸ்திரம்.

-கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com