கைரேகை அற்புதங்கள் : நன் மக்கட்பேறு யாருக்கு?

நல்ல மக்கள் செல்வம் அடைய யோகம் செய்திருக்க வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் 5-ம் வீடு என்பது புத்திர ஸ்தானத்தைக் குறிக்கும் இடமாகும்.
கைரேகை அற்புதங்கள் : நன் மக்கட்பேறு யாருக்கு?
Published on

ஒருவர் ஜாதகத்தில் 5-ம் வீட்டுக்கு அதிபதியாகும் கிரகம் உச்சம் பெற்றிருந்து, புத்திரகாரகனான குரு பலம் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு நல்ல புத்திரன் உண்டாவது நிச்சயம். ஒரு ஜாதகருக்கு புத்திர ஸ்தானாதிபதி வலுப்பெற்று, 5-ம் வீட்டின் அதிபதி ஆட்சி, உச்சம் பெறுமானால், அந்த நபருக்கு அந்த தசை காலத்தில் புத்திரர்களால் மேன்மை உண்டாகும்.

பொதுவாக 5-ம் வீடு சுப கிரகங்களால் சூழப்பெற்று, 9-ம் வீட்டில் சுப கிரகம் அமர்ந்து, 9-ம் வீட்டுக்கு 4-ம் வீடான 12-ல் சுபக் கிரகம் இருந்தாலோ அல்லது 12-ம் வீட்டை சுப கிரகம் பார்வை செய்தாலோ, அல்லது லக்னத்துக்கு 4-ம் வீடான மாதுர் ஸ்தானத்தை சுப கிரகம் பார்த்தாலோ அந்த ஜாதகர், தன் பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக இருப்பதுடன், அவரும் நல்ல மக்கட்பேறை பெறுவார் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஒருவர் ஜாதகத்தில் குரு ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால், அந்த நபர் தன்னுடைய பெற்றோரை நல்லவிதமாக கவனித்துக் கொள்வார். மகனுக்கு சுக்ர தசை உச்சமாக அமைந்த ஜாதகரும், தன்னுடைய பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்வார். 5-ம் வீட்டில் குரு இருந்தால், அந்த ஜாதகருக்கு பிள்ளைகளால் பாக்கியம் உண்டாகும். மேலும் அரசாங்க வேலை, பெரிய தனியார் நிறுவனத்தில் உயர் பதவி போன்ற பலன்களும் கிடைக்கும். குரு 5-ம் வீட்டில் இருந்து லக்னத்தை பார்வை செய்வதால், வாழ்க்கையில் மறு மலர்ச்சி ஏற்படும். லட்சுமி யோகம் அமையும்.

சனியை குரு பார்வை செய்தால் அந்த ஜாதகர் கெட்டுப் போவதில்லை. 5-ல் குருவும், கேதுவும் இணைந்து இருந்தால் அந்த ஜாதகர் பாக்கியவானாக இருப்பார். அவருக்கு பெரும் பதவிகள் வந்து சேரும்.

இனி கைரேகைப்படி நன் மக்கட்பேறு யாருக்கு என்பதை பார்க்கலாம். சனி மேட்டில் நேராக ஒரு செங்குத்து ரேகை இருப்பின், அந்த நபருக்கு நிச்சயமாக ஆண் வாரிசு உண்டு என்பதை தெரிவிக்கும் அறிகுறியாகும். அந்த செங்குத்து ரேகை, எந்தவித குறுக்கீட்டு ரேகையும் இன்றி நல்ல விதமாக அமைந்திருப்பின், அவர் தன்னுடைய மகனால் பாக்கியம் பெறுவார். சாதாரண மனிதனாக பிறந்த அவர் தன்னுடைய மகனால் பெரும் புகழ் அடைவார். அந்த மகன் பெரும் உத்தியோகத்தில் இருக்கும் யோகம் வாய்க்கும். குரு மேடு பலமாக இருந்தால் நல்ல புத்திரர்கள் அமைவார்கள். குரு மேட்டில் நட்சத்திரக் குறி இருப்பது மேலும் சிறப்பு சேர்ப்பதாகும்.

- கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com