ஓம்சக்தி.. மகாசக்தி.. சமயபுர மாரியம்மன் ராஜகோபரத்தை தரிசனம் செய்த பக்தர்கள்..!

சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வணங்கினர்.
Published on

சமயபுரம்:

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி ஆகும். அதன்படி இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கோவிலின் முன்பகுதியான கிழக்குப் பக்கத்தில் ராஜகோபுரம் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடந்து முடிந்தது.

மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்நிலையில்,ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கடந்த 2017 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாரை சேர்ந்த பொன்னர் -சங்கர் என்ற இரட்டை சகோதரர்கள் ராஜகோபுரம் கட்டி தர முன்வந்தனர். இதையடுத்து திட்ட மதிப்பீடு செய்து 73 அடி உயரத்தில் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி முடிவுற்றது.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் நான்காம் கால பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 6 மணிக்கு மகாபூர்ணா ஹூதியும்,தீபாராதனை, யாத்திரா தானம் நடைபெற்றது.

தொடர்ந்து 7 மணிக்கு 7 நிலைகள் கொண்ட கிழக்கு ராஜகோபுரத்திற்கு மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கைகள் ஒலிக்க புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம்சக்தி, மகாசக்தி என்ற பக்தி கோஷத்துடன் ராஜகோபரத்தை தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை காண்பதற்காக கோவிலின் நான்கு புறங்களிலும் மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள மாடி வீடுகளிலும் ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர். அவர்கள் மீது சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் குழாய் மூலம் புனித நீரை தெளித்தனர்.

கும்பாபிஷேக விழாவில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், ஏழு நிலை ராஜகோபுர உபயதாரர்கள் இரட்டைச் சகோதரர்களான பொன்னர் சங்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com