திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்

சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள், “முருகனுக்கு அரோகரா” என கூறி பக்தி பரவசமடைந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று (புதன்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. இதையொட்டி திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12-ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பர தாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் குளத்துமணி அய்யர் யானை மீது அமர்ந்து பிடித்தவாறு கொடிப்பட்டம் 8 வீதிகளிலும் உலா வந்தது.

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இன்று காலை மாசித்திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. முன்னதாக பால், மஞ்சள், விபூதி, தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முருகனுக்கு அரோகரா என கூறி பக்தி பரவசமடைந்தனர்.

12 நாட்கள் நடக்கும் மாசித் திருவிழாவையொட்டி திருசெந்தூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. பிப். 23ம் தேதி சிகர நிகழ்ச்சியான மாசி தேரோட்டம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com