

"நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்...” என்று மகாகவி பாரதியார் வேதனையின் உச்சத்தில் பாடிய வரிகள் போல மக்களின் நெஞ்சை பொறுக்கமுடியாமல் பதற வைத்தது. சாத்தான்குளத்தில் நடைபெற்ற தந்தை-மகன் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம். இந்த கொடூர இரட்டை கொலைக்கு நேற்று மதுரை கோர்ட்டு அளித்த தீர்ப்பு எல்லோரையும் நிம்மதி பெருமூச்சுவிட வைத்துள்ளது. சட்டத்தை காப்பவர்களே அதை மீறினாலும், அவர்களுக்கும் நிச்சயம் தண்டனை உண்டு என்பதை இந்த தீர்ப்பு பறைசாற்றிவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார், கொரோனா ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி போலீஸ்நிலையத்துக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். பின்னர் அவர்களை கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு உடல்நிலை மோசமானதால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஜெயராஜூம், பென்னிக்சும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து 10 போலீசார் மீது மதுரையில் உள்ள மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் ஒரு போலீசார் கொரோனா காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, மீதம் உள்ள 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் பலமுறை நீதிமன்றங்களில் ஜாமீன் கேட்டு முறையிட்டும் வேலியே பயிரை மேய்வதா என ஜாமீன் மறுக்கப்பட்டது.
கடந்த மாதம் 23-ந்தேதி 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்துவிட்டு, அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை நேற்று மாலையில் நீதிபதி முத்துக்குமரன் வாசித்தார். இந்த வழக்கு, அரிதிலும் அரிதான வழக்கு. தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி மனம் போன போக்கில் போலீசார் தாக்கி உள்ளனர். குற்றவாளிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது கடுமையான குற்றமாகும். ஒரு குடும்பத்தின் ஆணி வேர் பிடுங்கப்பட்டுள்ளது.
எனவே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதே சிறந்தது என நீதிமன்றம் கருதுகிறது. இதுபோன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால் அது அச்சத்தை தராது. எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாத வகையில் தீர்ப்பு இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருதுகிறது. எனவே குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 பேருக்கு தூக்கு தண்டனையும், ரூ.1.36 கோடி அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
லாக் அப் மரணத்துக்காக இத்தனை பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை இந்த தீர்ப்பு ஒரு பெரும் சுவர் போல நின்று தடுக்கும். கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் வரவேற்று இருக்கிறார்.
"கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல், பைங்கூழ் களைகட் டதனொடு நேர்" என்று கூறியுள்ளார். அதாவது கொடியவர் சிலரைக் கொலைத் தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்ற களையைக் களைவதற்கு நிகரான செயலாகும் என்று பறைசாற்றியதே, இந்த தீர்ப்புக்கு வழங்கப்பட்டுள்ள நற்சாட்சி ஆகும். இந்த வழக்கில் நீதிக்கு 6 ஆண்டுகள் தாமதமானாலும், நீதி மறுக்கப்படவில்லை. இறுதியாக நீதி வென்றிருக்கிறது.