பிறந்த நாளன்று 100 நாள் சாதனை பட்டியல்!

இன்று பிரதமர் நரேந்திரமோடி தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
100 day achievement list on birthday!
Published on

சென்னை,

இன்று செப்டம்பர் 17-ந் தேதி பல வரலாற்று சிறப்பு மிக்க நாள். சமூகத்தில் பல பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த, பெண் விடுதலைக்கு பலத்த குரல் கொடுத்த தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாள். தி.மு.க. தொடங்கிய நாளும் இதுதான். 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதிதான் தி.மு.க. உதயமாகியது. அந்தவகையில், இன்று பவள விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் ஆட்சிக்கு வருவதற்கு வித்திட்ட நாள் இதேநாள். அதுபோல, பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாளும் இதுதான். இன்று அவர் தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இவைகள் மட்டுமல்லாமல், இன்றைய தினத்துக்கு மற்றொரு சிறப்பும் இருக்கிறது. 3-வது முறையாக பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி அமைத்து 100-வது நாள் இன்று. ஏற்கனவே குஜராத்தில் 2001 முதல் 2014 வரை, தொடர்ந்து 3 முறை முதல்-மந்திரியாக பொறுப்பு வகித்த அவர், 2014 முதல் இந்திய நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். பொதுவாக எந்த ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்களின் படிப்பு திறனை அளவிடுவது அவர்களின் மதிப்பெண் பட்டியல்தான். அதுபோல பிரதமர் நரேந்திரமோடியின் 100 நாள் ஆட்சியின் சாதனைகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த 100 நாட்களில் அவர் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். அதில், ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் சாலை, ரெயில்வே, துறைமுகம், விமான சேவை போன்ற பல கட்டமைப்பு திட்டங்களாகும்.

பிரதமருக்கு பிடித்த மற்றொரு திட்டமான லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்திலும் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. சுயஉதவி குழுக்கள் மூலம் பெண்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்க வைக்கும் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதிகளாகியிருக்கிறார்கள். "இந்த எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்துவதே லட்சியம்" என்று முழங்கிய பிரதமரின் இந்த 100 நாள் ஆட்சியில், புதிதாக 11 லட்சம் பெண்கள் இந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறார்கள். இதுதவிர, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு, பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிதாக 3 கோடி வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியதன் மூலம் 12 கோடியே 33 லட்சம் விவசாயிகள் பயனடைந்தது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், அவர்கள் திறனை மேம்பாடு செய்யவும் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம், சிறு தொழில்களுக்கான முத்ரா கடன் வரம்பை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தியது, மத்திய அரசாங்கத்தில் 15 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு என்று பல சாதனைகள் அடுக்கடுக்காக பட்டியலிடப்பட்டுள்ளன. நேற்று கூட தூத்துக்குடியில் சர்வதேச சரக்குப் பெட்டக முனையத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்துள்ளார்.

இதுதவிர, வரலாற்றில் முதல் முறையாக திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட விழா மேடையிலேயே அதன் தொடக்க விழா தேதியையும் அறிவிக்கப்படுவது மிகவும் பாராட்டுக்குரியதாகும். மொத்தத்தில் இந்த 100 நாட்களில் அனைத்து துறைகளிலும் பதிவிடப்பட்ட சாதனைகள் இன்னும் அதிவேகமாக தொடர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com