100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள்

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் புதிய தொழில்கள் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் 97 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள்
Published on

சென்னை,

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற ஒரு தெளிவான இலக்கை ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனேயே முதல்-அமைச்சர் விஜய் நிர்ணயித்தார். இத்தகைய பெரும் இலக்கை எட்டுவதற்கு புதிய தொழில்களை உருவாக்குவதும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதும் மிகவும் அவசியம். இதனால், தொழில்துறையை வேகமாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் தொழில்துறை அமைச்சராக கீர்த்தனாவையும், அந்தத் துறைக்கு கூடுதல் தலைமை செயலாளராக எஸ்.விஜயகுமாரையும் நியமித்தார். இந்தியாவிலேயே தமிழ்நாடு, திரிபுரா ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே பெண்கள் தொழில்துறை அமைச்சர்களாக உள்ளனர்.

பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அமைச்சர் கீர்த்தனாவும், அதிகாரிகள் குழுவினரும் தென்கொரியாவுக்கு சென்று, ரூ.39 ஆயிரம் கோடி முதலீட்டில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதோடு நின்றுவிடாமல், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களுடனும், வெளிநாடுகளின் புகழ்பெற்ற நிறுவனங்களுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், தமிழக அரசு வழங்கத் தயாராக உள்ள சலுகைகள், வசதிகள், மானியங்கள் ஆகியவை முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது கடந்த மே மாதம் 10-ந்தேதிதான். வருகிற 17-ந்தேதிதான் 100 நாட்கள் நிறைவடைகின்றன. ஆனால், இந்தக் குறுகிய காலத்திற்குள்ளாகவே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் குறிப்பிடத்தக்க வேகத்தை தொழில்துறை காட்டியுள்ளது. இந்த முயற்சிகளுக்கு மகுடம் சூட்டுவதுபோல், சென்னையில் நேற்று 'வெற்றி தமிழ்நாடு' என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஒரே நாளில் புதிய தொழில்கள் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் 97 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த விழாவில் அமைச்சர் கீர்த்தனா பேசும்போது. "இந்த ஒப்பந்தங்களோடு எங்கள் ஆட்சியின் மொத்த முதலீடுகள் ரூ.1.02 லட்சம் கோடியை தாண்டும். இதன் மூலம் 1.21 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். நாங்கள் ஆட்சி நடத்த தொடங்கிய ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூ.1,000 கோடியை ஈர்த்து இருக்கிறோம். இதை சிலர் பெரிய சாதனை என்று கூறலாம். ஆனால் எங்கள் அரசைப் பொறுத்தவரை இது கதையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே. தொழில் முதலீட்டுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு அனைத்து அனுமதிகளையும் வழங்குவதற்கு 21 நாட்கள் காலக்கெடுவை எங்கள் முதல்-அமைச்சர் நிர்ணயித்துள்ளார். இந்த நிறுவனங்களால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடி தங்களது சொந்த ஊரைவிட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை இருக்காது" என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக கூறினார்.

இந்த மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சர் விஜய், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். தொழில் தொடங்குவதற்கும், விரிவாக்கத்துக்கும் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளும் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஒப்பந்தம் செய்துள்ள 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக அமைய உள்ளன என்பதுதான் 'வெற்றி தமிழ்நாடு' மாநாட்டின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும். குறுகிய 100 நாட்களுக்குள், ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் என்ற ஒரு இமாலய சாதனையை செய்து காட்டிய முதல்-அமைச்சர் விஜய்யும், தொழில்துறையினரும் பாராட்டுக்குரியவர்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com