

தேர்தல் என்பது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. ஜனநாயகத்தின் வேர்கள் நமது மண்ணில் ஆயிரம் ஆண்டுகளாக ஆழமாகப் பதிந்துள்ளன. உத்திரமேரூர், செந்தலை போன்ற பகுதிகளில் நடைமுறையில் இருந்த குடவோலை முறை, மக்கள் பிரதிநிதிகளை மக்களே தேர்ந்தெடுத்த தமிழகத்தின் முன்னோடி ஜனநாயக மரபை பிரதிபலிப்பதாக இருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பே தேர்தல் நடைமுறைகள் அமலில் இருந்தாலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தின் (அன்றைய மெட்ராஸ் மாகாணம்) முதல் சட்டமன்றத் தேர்தல் 1952-ம் ஆண்டு நடைபெற்றது. நாளை 17-வது சட்டமன்றத் தேர்தலை தமிழகம் எதிர்கொள்கிறது. கடந்தகால தேர்தல்களில் அரசியல் சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க., மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 184 இடங்களில் வெற்றி பெற்று இமாலயச் சாதனை படைத்தது. தமிழகத் தேர்தல் வரலாற்றில் ஒரு கட்சி தனித்துப் போட்டியிட்டுப் பெற்ற அதிகபட்ச இடங்கள் இதுவேயாகும். 1991-ம் ஆண்டு தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. 164 இடங்களிலும், காங்கிரஸ் 60 இடங்களிலும் என இந்தக் கூட்டணி மொத்தம் 225 தொகுதிகளைக் கைப்பற்றி 59.8 சதவீத வாக்குகளை வசப்படுத்தியது. தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு கூட்டணி பெற்ற மிக உயர்ந்த வாக்கு சதவீதமாக இன்றுவரை உள்ளது.
2016-ம் ஆண்டு தேர்தலில் 89 உறுப்பினர்களைப் பெற்ற தி.மு.க., தமிழக அரசியல் களத்தில் அதிக எண்ணிக்கை கொண்ட எதிர்க்கட்சி என்ற சிறப்பை பெற்றது. அப்போது மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்தார். அதன்மூலம் ஆளுங்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் அதிக உறுப்பினர்கள் வெற்றி பெற்ற கட்சி தி.மு.க.தான் என்ற சாதனை படைத்தது. மேலும் இதுவரை காங்கிரஸ் கட்சி 1952, 1957, 1962 ஆகிய 3 தேர்தல்களில் ராஜாஜி, காமராஜர் தலைமையில் தொடர்ச்சியாக ஆட்சி அமைத்தது. அதேபோல் எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. 1977, 1980, 1984 ஆகிய 3 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. தி.மு.க.வும் அண்ணா, கருணாநிதி தலைமையில் 1967, 1971 ஆகிய இரு தேர்தல்களில் தொடர்ச்சியாக ஆட்சியை தக்கவைத்தது. பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் தொடர்ச்சியாக ஆட்சி அமைத்து சாதனை படைத்தது.
கருணாநிதி, ஜெயலலிதா என 2 பெரும் தலைவர்கள் இல்லாமல் 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. 133 தொகுதிகளில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனார். நாளை நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் என்பதோடு அல்லாமல் புதிய வரவாக நடிகர் விஜய்யின் த.வெ.க.வும் விசில் சின்னத்தில் களமிறங்கியுள்ளது. இந்த தேர்தல் பல கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளது. மு.க.ஸ்டாலின் மீண்டும் 2-வது முறையாக ஆட்சியைத் தொடருவாரா? 2021-ல் இழந்த ஆட்சியை அ.தி.மு.க. மீட்டெடுக்குமா? புதிய அரசியல் சக்தியாக களமிறங்கிய விஜய்க்கு எவ்வளவு ஆதரவு கிடைக்கும்? அதுமட்டுமின்றி, இந்த முறை வெளியான தேர்தல் அறிக்கைகளில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய மூன்று கட்சிகளும் ஒருசேர மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்டு வாக்குறுதிகளை அறிவித்துள்ளன. அவற்றில் எது மக்களின் மனதை கவர்ந்து, ஆட்சி பீடத்தில் யாரை அமர்த்த போகிறது? என்பதையும் இந்த தேர்தல் தீர்மானிக்க உள்ளது.