பாகிஸ்தானுக்கு ஆட்டம் காட்டிய 6 வீரர்கள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய தரப்பில் வீரமரணம் அடைந்த வீரர்களின் விவரங்கள் முதல்முறையாக சமீபத்தில் வெளியிடப்பட்டது.
பாகிஸ்தானுக்கு ஆட்டம் காட்டிய 6 வீரர்கள்
Published on

இந்திய மண்ணின் வீரம் எவருக்கும் சளைத்ததல்ல என்பதை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துக் காட்டியது. உலகமே அதைக் கண்டு வியந்தது. எழில்மிகு காஷ்மீரில் பஹல்காம் என்ற பசுமை போர்த்திய பள்ளத்தாக்கு உள்ளது. இந்த இடத்துக்கு எப்போதும் சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அங்கு காரில் செல்ல முடியாது. குதிரையிலோ அல்லது நடந்தோதான் செல்லவேண்டும். பொதுவாக புதிதாக திருமணம் ஆன தம்பதிகளுக்கு சொர்க்க பூமியாக பஹல்காம் பள்ளத்தாக்கு கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ந்தேதி பட்டப்பகலில் அங்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகளை, அருகில் இருந்த காட்டுக்குள் இருந்து திடீரென வந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 5 பேர், கையில் எந்திரத்துப்பாக்கிகளுடன் கண்மூடித்தனமாக தாக்கினர். பெண்களை மட்டும் விட்டுவிட்டு 26 பேரை சுட்டுக்கொன்றனர். இதில் ஒருவர் அந்த பகுதியில் குதிரை ஓட்டி வாழ்வாதாரம் நடத்தி வந்த உள்ளூர்வாசி ஆவார்.

இந்த கொடூரச்செயலால் உயிரிழந்தவர்களின் மனைவியர் தங்கள் நெற்றியில் இருந்த குங்குமத்தை இழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது. நமது பெண்களின் குங்குமம் அழிக்கப்பட்டதற்கு பதிலடியாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிடப்பட்டது. மே 7-ந்தேதி அதிகாலையில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா துல்லிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய விமானப்படையும், ராணுவமும் இந்திய எல்லைக்குள் இருந்தபடியே பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கின. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பாகிஸ்தானில் உள்ள பல விமான தளங்கள் மற்றும் ராணுவ தளங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் ஏவுகணைகள் மற்றும் நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை கோரியதை தொடர்ந்து, இந்தியாவும் மே 10-ந்தேதி மாலை போர் நிறுத்தத்தை அறிவித்தது.

இந்த நடவடிக்கையின்போது இந்திய தரப்பில் வீரமரணம் அடைந்த வீரர்களின் விவரங்கள் முதல்முறையாக சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 6 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களில் 5 பேர் ராணுவத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் விமானப்படையை சேர்ந்தவர் ஆவார். இவர்களில் ராணுவ வீரர் சுனில்குமாருக்கு 'வீர் சக்ரா' விருதும், விமானப்படை சார்ஜண்ட் சுரேந்திர குமாருக்கு 'வாயு சேனா' பதக்கமும் கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுபேதார் மேஜர் பவன்குமார், லான்ஸ் நாயக் தினேஷ்குமார், வீரர் முரளி நாயக், ஹவில்தார் சுனில்குமார் சிங் ஆகியோரின் பெயர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றும் வகையில், அவர்களது பெயர்கள் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த 6 வீரர்களுக்கும் நாடே அஞ்சலி செலுத்துகிறது.

நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த அந்த வீரர்களின் வீரச்செயல்கள் எதிர்கால சந்ததியினருக்கும் தெரியும் வகையில், ஆபரேஷன் சிந்தூரை பற்றி குறிப்பிடும் போதெல்லாம் இந்த 6 வீரர்களின் தியாகத்தையும் நினைவுகூரவேண்டும். அவர்கள் மறைந்துவிட்டாலும், அவர்களின் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது. அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படவேண்டும். எப்போது ஆபரேஷன் சிந்தூரை நாடு நினைவுகூருகிறதோ. அப்போது இந்த 6 வீரர்களின் தியாகமும் அதனுடன் இணைந்தே வரலாற்று பக்கங்களில் இடம்பெறும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com