தங்கம் இறக்குமதியை குறைக்க ஒரு நல்ல வழி

நாட்டின் மொத்த கையிருப்பில் தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில்தான் அதிகபட்சமாக 28 சதவீதம், அதாவது 8,960 டன் தங்கம் இருக்கிறது.
தங்கம் இறக்குமதியை குறைக்க ஒரு நல்ல வழி
Published on

இந்தியாவின் நிதிப்பற்றாக்குறைக்கு முக்கிய காரணம், நமது இறக்குமதிகளுக்கான செலவு ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானத்தை விட மிகவும் அதிகமாக இருப்பதால்தான். கச்சா எண்ணெய், தங்கம், எல்.பி.ஜி., பாமாயில், உரம், விமானம், சோலார் செல்கள், அபூர்வ தாதுக்கள், கம்ப்யூட்டர் சிப்கள் போன்ற பல பொருட்களின் இறக்குமதிக்கான செலவுதான் இறக்குமதி செலவை உச்சத்துக்கு கொண்டு போய்விடுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவின் இறக்குமதி செலவு 776 பில்லியன் டாலர் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.74 லட்சம் கோடியாகும். இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யப்படும் 10 பொருட்களில் முதல் இடத்தில் கச்சா எண்ணெயும், 2-வது இடத்தில் தங்கமும் இருக்கின்றன.

கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பொறுத்தமட்டில், சுமார் ரூ.12.8 லட்சம் கோடி செலவாகியிருந்தாலும், முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 5.84 சதவீதம் குறைந்துள்ளது என்பது ஒரு நல்ல செய்தியாகும். ஆனால், 2-வது இடத்தில் இருக்கும் தங்கத்தின் இறக்குமதி சுமார் ரூ.6.88 லட்சம் கோடி அளவுக்கு இருப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 24.1 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இவை அனைத்துமே வீடுகளில் வாங்கிய தங்கம்தான். ஆக, தங்கத்தின் மோகம் என்பது அதன் விலை எவ்வளவு உச்சத்துக்கு போனாலும் அந்த வேகத்தில் உயரத்தான் செய்கிறது.

இந்தியாவின் மொத்த இறக்குமதியில் கச்சா எண்ணெய் இறக்குமதி 17.36 சதவீதமாகவும், தங்கத்தின் இறக்குமதி 9.3 சதவீதமாகவும் இருக்கிறது. இந்தியாவில் வீடுகளில் மட்டும் 32 ஆயிரம் டன் தங்கம் ஆபரணங்களாகவும், தங்க நாணயங்களாகவும், தங்க கட்டிகளாகவும், பீரோக்களுக்குள்ளும், பெட்டிகளுக்குள்ளும் இருக்கிறது. தங்கத்தை ஒரு சொத்தாகவும், நல்ல வருமானத்தை கொடுக்கும் சேமிப்பாகவும் மக்கள் கருதுகிறார்கள். இந்தியாவில் பரம்பரையாக தங்கம் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாக வீடுகளில் தங்கம் வாங்கப்படுகிறது. இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் கேரளம், ஆந்திரா, கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் வரிசையாக உள்ளன. நாட்டின் மொத்த கையிருப்பில் தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில்தான் அதிகபட்சமாக 28 சதவீதம், அதாவது 8,960 டன் தங்கம் இருக்கிறது.

கடந்த ஆண்டு மட்டும் தங்கத்தின் விலை 70 சதவீதம் அதிகரித்தாலும், மக்கள், குறிப்பாக பெண்கள், அதை கிஞ்சித்தும் பொருட்படுத்துவதில்லை. காரணம், இன்னும் விலை உயர்ந்துவிடும். இப்போதே வாங்குவதுதான் நல்லது என்ற எண்ணத்தில்தான் அதிகமாக வாங்குகிறார்கள். ஆக, தங்க இறக்குமதியை எப்படித்தான் குறைப்பது என்பதற்கு நிபுணர்கள் நல்ல ஆலோசனைகளை கூறியிருக்கிறார்கள். தங்கத்தை நகையாகவோ, தங்கக் கட்டிகளாகவோ வாங்கி வீடுகளில் சேமித்து வைப்பதற்குப் பதிலாக, மின்னணு தங்கச் சான்றிதழ், தங்க பரிவர்த்தனை நிதி, தங்க அடிப்படையிலான பரஸ்பர நிதி போன்ற நிதி முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யும் பழக்கத்தை மக்கள் அதிகரிக்க வேண்டும். இந்த திட்டங்களில் முதலீடு செய்தால், தங்கத்தின் விலை உயர்வால் கிடைக்கும் பலனைப் பெற முடியும். அதே நேரத்தில் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது, செய்கூலி செலுத்துவது, சேதார இழப்பு ஏற்படுவது போன்ற பிரச்சினைகளும் இருக்காது. மறுபுறம் புதிய தங்க இறக்குமதிக்கான தேவை குறைவதால் நாட்டின் அன்னியச் செலாவணி செலவும், வர்த்தகப் பற்றாக்குறையும் கட்டுப்படுத்தப்படும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com