

தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் அரசமைக்க இப்போதுபோல சிக்கல் ஏற்பட்டதே இல்லை. கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் 96 இடங்களில் மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றிருந்தாலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்து, அந்த 5 ஆண்டுகளையும் வெற்றிகரமாக நிறைவுசெய்தது. நடந்து முடிந்த தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. 59 இடங்களிலும், அ.தி.மு.க. 47 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், பா.ம.க. 4 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 2 இடங்களிலும், பா.ஜனதா, தே.மு.தி.க., அ.ம.மு.க. தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன.
இதில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருந்து த.வெ.க. பக்கம் தாவியது. தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று கவர்னர் அர்லேகரை சந்தித்து த.வெ.க. உரிமை கோரியது. இதுதொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் கொடுத்த கடிதத்தில் கூட்டணி ஆட்சி என்று குறிப்பிட்டதால், கூட்டணியில் உள்ள கட்சிகளின் பட்டியலோடு 118 இடங்கள் இருப்பதை உறுதிபடுத்தினால்தான் அரசு அமைக்க முடியும் என்று திட்டவட்டமாக கவர்னர் சொல்லிவிட்டார். இதனால் த.வெ.க.வுக்கு ஆட்சியமைப்பதில் தடங்கல் ஏற்பட்டது. தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளான வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் ஆதரவு கரம் நீட்டியதால் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், அதைத்தாண்டி த.வெ.க.வுக்கு 120 இடங்கள் கிடைத்தன.
இந்த புத்துணர்ச்சியோடு 4-வது முறையாக விஜய் நேற்று முன்தினம் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதற்கு கவர்னரும் ஒப்புதல் அளிக்கவே பதவியேற்பு விழா நேற்று நடந்தது. ஆக பல தடைகளைத்தாண்டி விஜய் ஆண்டவன் மீது ஆணையிட்டு என்று கூறி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக்கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். பதவி ஏற்பு முடிந்தவுடன் அதே மேடையிலேயே 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களின் பாதுகாப்புக்கு சிங்க பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள் ஒழிக்கப்படும் என்ற 3 முக்கிய கோப்புகளுக்கு கையெழுத்திட்டதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்ற வெள்ளை அறிக்கையும் வெளியிடப்படும் என்று அறிவித்தார். விஜய் தப்பு பண்ணமாட்டான். தப்பு பண்ணவும் விடமாட்டான் என்று சொன்னது மக்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
புதிய அரசுக்கு, முன்னாள் முதல்-அமைச்சர்கள் மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்திருப்பது நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. "நல்லா இருப்போம், நல்லா இருப்போம், எல்லோரும் நல்லா இருப்போம்" என்று தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் விஜய் முழங்கியதைப்போல நல்லாட்சி தருவார் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அவருக்கு முன்னால் பல சவால்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவரே சொன்னதுபோல ஏறத்தாழ ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கடனில் தத்தளிக்கும் தமிழக அரசின் பொருளாதார நிலையை உயர்த்தவேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றவேண்டும். வேலைவாய்ப்புகளை பெருக்கவேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவேண்டும் என அடுக்கடுக்கான பல பணிகள் ஜனநாயகனுக்காக காத்திருக்கின்றன.