செஸ் விளையாட்டில் தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு பெருமை!

தமிழகத்தில் அதிக அளவில் செஸ் வீரர், வீராங்கனைகள் உருவாகி வருகிறார்கள்.
செஸ் விளையாட்டில் தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு பெருமை!
Published on

செஸ் என்பது ஒரு விளையாட்டு மட்டும் அல்ல. கூர்மையாக சிந்திக்கும் திறன், சிக்கல்களை தீர்க்கும் யுக்தி, நினைவாற்றல், கவனத்தை ஒருமுகப்படுத்துவது ஆகியவற்றை வளர்க்கும் சக்தியாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட செஸ் விளையாட்டின் தாயகம் தமிழ்நாடு என்பது நமக்கெல்லாம் பெருமை. பழங்கால மன்னர்கள் சதுரங்கம் என்ற பெயரில் விளையாடியது சங்ககால இலக்கியங்களிலும், காவியங்களிலும் கூறப்பட்டுள்ளது. அந்த சதுரங்கம்தான் உலக அரங்கில் செஸ் போட்டியாக விரிவடைந்துள்ளது. அதனால் தான் என்னவோ இந்தியாவில் செஸ் விளையாட்டின் மையமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2022-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 176 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு பிரமாண்டமாக நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்தது.

அதற்கு முன்பாக உலக செஸ் சாம்பியன்ஷிப்பும் நடத்தப்பட்டிருந்தது. செஸ் விளையாட்டு மீதான விழிப்புணர்வு, அரசு அளிக்கும் ஊக்கம், செஸ் விளையாட்டுக்கான அகாடமிகள், பள்ளிகளிலும் செஸ் விளையாடும் ஆர்வம் காரணமாக தமிழகத்தில் அதிக அளவில் செஸ் வீரர், வீராங்கனைகள் உருவாகி வருகிறார்கள். சில ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் சுமார் 15,000 பதிவு செய்யப்பட்ட வீரர்கள் இருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி விட்டது என்கிறார்கள் செஸ் ஆர்வலர்கள். இதுமட்டுமா? இப்போது வீடுகளில் தாயக்கட்டை விளையாடிய பெண்களெல்லாம், செஸ் விளையாடத் தொடங்கிவிட்டார்கள்.

நாட்டின் முதல் கிராண்ட்மாஸ்டராக தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 1987-ம் ஆண்டில் உருவெடுத்தார். அத்துடன் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தார். அன்று அவர் ஊன்றிய விதை தான் இன்று பெரும் விருட்சமாக ஆல் போல் வளர்ந்து நிற்கிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை வீரர் குகேஷ் 19 வயதிலேயே உலக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். குகேசை தவிர, பிரக்ஞானந்தா, வைஷாலி போன்றோரும் உலக அளவில் செஸ் நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள். செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் அங்கீகாரம் முக்கியமானது. குறைந்தது 2,500 எலோ தரவரிசை புள்ளி மற்றும் சர்வதேச செஸ் சம்மேளனம் நிர்ணயிக்கும் குறிப்பிட்ட பெரிய போட்டிகளில் விளையாடி முன்னணி வீரர்களை வீழ்த்தி மூன்று விதமான இலக்குகளை அடையும்போது தான் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்ட முடியும். நாட்டில் மொத்தம் 91 செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகி இருக்கிறார்கள். இவர்களில் தமிழகத்தின் பங்களிப்பு மட்டும் 36. தமிழகத்திற்கு அடுத்தபடியாக மராட்டியத்தில் இருந்து 13 பேர் கிராண்ட்மாஸ்டர்களாகி வந்துள்ளனர்.

சமீபத்தில், சென்னையைச் சேர்ந்த இளம்பரிதி என்ற 16 வயது மாணவர் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டினார். போஸ்னியா நாட்டில் நடந்த சர்வதேச போட்டியில் கிராண்ட்மாஸ்டருக்குரிய இறுதி இலக்கை அடைந்தார். தனியார் பள்ளியில் படிக்கும் இளம்பரிதிக்கு இளம் வயதிலேயே செஸ் மீது ஆர்வம் அதிகம். முறையான பயிற்சியின் மூலம் திறமையை வளர்த்தெடுத்த அவர், தனது விடாமுயற்சியாலும், போராட்டத்தாலும் கிராண்ட்மாஸ்டர் ஆகியிருக்கிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாம்பியன்ஸ் மேம்பாட்டு திட்டத்தின் பயனாளியாகவும் இருக்கிறார். அவரை உச்சிமுகர்ந்து பாராட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் செஸ் களத்தின் மீது எழுஞாயிறு உதயமாகி வரும் நிலையில் நம்பிக்கை அளிக்கும் அனைத்தையும் வெற்றிகளாக திராவிட மாடல் மாற்றிக்காட்டும். மேலும் பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவெடுப்பார்கள் என கூறியிருப்பது வெறும் வார்த்தை அல்ல. நிதர்சனமான உண்மை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com