ஒரே நேரத்தில் தேர்தல்

உலகிலேயே ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது. கிராமப்பஞ்சாயத்து, நகரப்பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், நகரசபை, மாநகராட்சி என்று அனைத்து உள்ளாட்சிகளிலும் தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தே நிர்வாகம் நடந்துவருகிறது.
ஒரே நேரத்தில் தேர்தல்
Published on

லகிலேயே ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது. கிராமப்பஞ்சாயத்து, நகரப்பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், நகரசபை, மாநகராட்சி என்று அனைத்து உள்ளாட்சிகளிலும் தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தே நிர்வாகம் நடந்துவருகிறது. மாநில அளவில் ஆட்சியை நடத்த சட்டசபை தேர்தல்கள் மூலம் ஆளுங்கட்சி தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதுபோல, தேசிய அளவில் மத்திய அரசாங்கத்தை வழிநடத்த பாராளுமன்ற தேர்தல் மூலம் ஆளுங்கட்சி தேர்ந்தெடுக்கப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் 1951ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை பாராளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தலும் ஒரேநேரத்தில்தான் நடந்து வந்திருக்கின்றன. ஆனால், அதன்பிறகு மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் இரண்டிலுமே சிலநேரங்களில் மெஜாரிட்டி இல்லாமல் அரசாங்கம் கவிழும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்படி தொடங்கி, தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தலும் தனித்தனியாகத்தான் நடந்துவந்திருக்கின்றன. ஒரேநேரத்தில் தேர்தல் நடந்தால் அரசாங்கத்துக்கு பொருள்செலவு மிச்சம். ஏனெனில், கடந்த பாராளுமன்ற தேர்தல் நடத்துவதற்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவாகி இருக்கிறது. மாநில சட்டசபை தேர்தல்களை தனியாக நடத்தினால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ரூ.300 கோடி அளவுக்கு தனித்தனியே செலவாகும். ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தினால் இந்த செலவு மிச்சம். இதுமட்டுமல்லாமல், தேர்தல் பணிக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், துணை ராணுவப்படை போன்றவர்களை ஒவ்வொரு நேரமும், தனித்தனியாக ஒரு மாதத்துக்குமேல் ஈடுபடுத்தப்படுவது தவிர்க்கப்படும். ஏனெனில், தேர்தல் பணியின்போது, அவர்களால் மக்களுக்கான பணிகளை ஆற்றமுடியாது. அதுமட்டுமல்லாமல், தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வருகின்ற நேரத்தில், மாநில அரசுகளாலோ, மத்திய அரசாங்கத்தாலோ எந்த திட்டங்களையும் அறிவிக்கவோ, செயல்படுத்தவோ முடியாது. இதுபோன்ற பல நிலைமைகளை தவிர்க்க, வெகுகாலமாகவே ஒரேநேரத்தில் பாராளுமன்ற தேர்தலையும், சட்டசபை தேர்தலையும் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வந்திருக்கிறது.

திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பும், தேர்தல் கமிஷனும் இந்த கருத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள். பிரதமர் கூட இந்த கருத்தை வலியுறுத்தி வருகிறார். இதுபற்றி ஆராய்ந்து அறிக்கைதர, மத்திய அரசாங்க பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு சட்டம் மற்றும் நீதி அமைச்சக பாராளுமன்ற நிலைக்குழுவிடம் கோரப்பட்டுள்ளது. பா.ஜ.க.வைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் குபேந்திரயாதவ் தலைமையிலான இந்த குழுவில், 20 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்ட இந்த குழு இதுவரை 4 முறை கூடி விரிவாக ஆராய்ந்து வருகிறது. இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி சிவா, உதயகுமார் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விரைவில் இந்த குழு தன் அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறது. அதன்பிறகு அரசியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த பணிகளையெல்லாம் இன்னும் மிகவேகமாக முடித்து, 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போதே, அனைத்து மாநில சட்டசபை தேர்தலையும் நடத்தவேண்டும் என்பதுதான் மக்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com