

உலகில் இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பாக ஏ.ஐ. என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு இருக்கிறது. தொழில்நுட்பத்தின் புரட்சியாக கருதப்படும் இது அனைத்து துறைகளிலும் தடம் பதித்துள்ளது. இது மனிதன் செய்யும் அனைத்து வேலைகளையும். எஜமான்கள் போடும் கட்டளைக்கு பணிந்து மின்னல் வேகத்தில் செய்துமுடித்துவிடுகிறது.
மனிதன் ஒரு வேலையை செய்வதற்கு மூளையை கசக்கி சிந்தித்து செயல்படவேண்டியது இருக்கிறது. ஆனால் இந்த சிந்தனையை முடக்கிவிட்டு ஏ.ஐ.யே அனைத்து வேலைகளையும் செய்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக மென்பொருள் துறையில் நூற்றுக்கணக்கான என்ஜினீயர்கள் பல நாட்கள் சேர்ந்து உருவாக்கும் மென்பொருள் கோடிங்கை ஏ.ஐ. சில நிமிடங்களில் தந்துவிடுகிறது.
இது ஒருபக்கம் சாதகமான அம்சம் என்றாலும், மறுபக்கம் இனி எதிர்காலத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளாதவர்கள் எந்த வேலையையும் செய்யமுடியாது என்ற நிலை உருவாகிக்கொண்டு இருக்கிறது. மற்றொரு பக்கம் இப்போது பள்ளிக்கூடங்களில் கொடுக்கும் வீட்டுப்பாடங்களைக்கூட மாணவர்கள் சிந்தித்து விடை கண்டுபிடித்து எழுதுவதில்லை.
சிந்தனை திறனுக்கு கடிவாளம் போட்டுவிட்டு ஏ.ஐ.யை பயன்படுத்தி சுலபமாக எழுதிவிடுகிறார்கள். கட்டுரைகளைக்கூட பல புத்தகங்களை புரட்டி விவரங்களை சேகரித்து எழுதுவதில்லை. ஒரு விரலால் கம்ப்யூட்டரையோ, செல்போனையோ ஒரு தட்டு தட்டி அனைத்து விவரங்களையும் பெற்று எழுதிவிடுகிறார்கள். இவ்வளவு ஏன் இல்லத்தரசிகள் கூட புத்தகங்களிலும், யூ-டியூபிலும் பார்த்த சமையல் குறிப்புகளை ஏ.ஐ.யிடமே பெற்று விடுகிறார்கள்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உலகிலேயே அமெரிக்காதான் முன்னணியில் இருக்கிறது. அங்குள்ள ஓப்பன் ஏ.ஐ.யின் சாட்-ஜி.பி.டி., கூகுள் நிறுவனத்தின் ஜெமினி, எலான் மஸ்கின் குரோக் ஆகிய ஏ.ஐ. தொழில்நுட்பங்களின் மொழி மாதிரிகள் முன்னணியில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பயன்பாட்டுக்கு கதவுகளை திறந்து வைத்திருக்கிறது. இதனால் அந்த நிறுவனங்களுக்கும் பணம் மழை போல கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.
இவர்களுக்கு போட்டியாக சீன நிறுவனம் ஒன்றும் டீப்சீக் என்ற ஏ.ஐ. மொழி மாதிரியையும் களத்தில் இறக்கியது. ஆனால் இந்தியாவுக்கென்று சொந்தமாக இதுபோல ஒரு மொழி மாதிரி இல்லையே என்ற ஏக்கம் வெகு நாட்களாக இருந்தது. அதை தீர்த்து வைக்கும் வகையில் பாரத்-ஜென் என்ற பெயரில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் பணியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இது முழுக்க, முழுக்க மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படுகிறது.
இதுதவிர தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்பட இந்தியாவில் உள்ள 22 மொழிகளிலும் இதை எளிதாக பயன்படுத்தமுடியும். இதில் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் இதன் சேவைகளை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். கட்டணம் எதுவும் கட்டவேண்டியது இல்லை. சமீபத்தில் டெல்லியில் பல நாடுகள் கலந்துகொண்ட ஏ.ஐ. உச்சி மாநாட்டில் இதன் செயல்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல், அனைவரும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தியது உலகத்தையே வியக்க வைத்தது.
வருகிற ஜூலை மாதம் முழு அளவில் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்து, அனைத்து மக்களுக்கும் பயனளிக்கப்போகிறது. குறிப்பாக அன்னம் படைத்து வரும் விவசாயிகளுக்கு உற்ற தோழனாக தோள் கொடுக்கப்போகிறது. இனி சாட்-ஜி.பி.டி., ஜெமினி, குரோக், டீப்சீக் ஆகியவற்றுக்கு 'குட்பை' சொல்லிவிட்டு நானே வருவேன் என்று சுதேசி தயாரிப்பான பாரத்-ஜென் மக்களுக்கு பயன் சேர்க்கும் வகையில் தனது அத்தியாயத்தை தொடங்க இருக்கிறது.