தீபாவளியன்று நூறாண்டு கண்ட எல்.கே.அத்வானி

சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை எல்.கே.அத்வானி நடத்திய ரத யாத்திரை இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தீபாவளியன்று நூறாண்டு கண்ட எல்.கே.அத்வானி
Published on: 

பொதுவாக ஒருவரை வாழ்த்தும்போது, "நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க, ஊராண்ட மன்னர் புகழ்போலே, உலகாண்ட புலவர் தமிழ்போலே” என்ற 1967-ம் ஆண்டில் கவிஞர் வாலி எழுதிய திரைப்பட பாடலை பாடி வாழ்த்துவது வழக்கம்.

நூறாண்டு கடந்து வாழ்பவர்கள்

140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் நூறாண்டு கடந்து வாழ்பவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரம் ஆகும். உலகில் நூறு ஆண்டுகளை கடந்து அதிகம் வாழ்பவர்களை கொண்ட நாடுகளில் ஜப்பான் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் நூறாண்டுகளையும், அதற்கு மேலும் கடந்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த இடத்தில் உள்ள அமெரிக்காவில் 64 ஆயிரம் பேரும், 3-வது இடத்தில் சீனாவில் 39 ஆயிரம் பேரும் 100-ஐ கடந்து வாழ்கிறார்கள். அதுபோல 4-வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ள இந்தியாவிலும், பிரான்சிலும் தலா 29 ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.

எல்.கே.அத்வானி - 100

தற்போதைய வாழ்க்கை முறையிலும், மருத்துவ முன்னேற்றத்திலும் நூறு ஆண்டுகளை கடந்து வாழ்வது சாத்தியம் என்றாலும், அரசியல் உலகில் நூறு ஆண்டுகளை பார்ப்பவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் மூத்த கம்யூனிஸ்டு தலைவர்களான சங்கரய்யா, நல்லகண்ணு ஆகியோர் நூறு ஆண்டை பார்த்து மறைந்தவர்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளியன்று பா.ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி 100 ஆண்டுகளை தொட்டிருக்கிறார். எல்.கே.அத்வானி தற்போது பாகிஸ்தானில் இருக்கும் கராச்சியில் பிறந்து, பிரிவினைக்கு பிறகு இந்தியாவில் குடிபெயர்ந்தவர். அவர் பிறந்த நாளும் தீபாவளியன்றுதான். அவர் நூறு ஆண்டுகளை கண்ட நாளும் தீபாவளியன்றுதான் என்பதை பார்க்கும்போது. என்ன பொருத்தம் என்றுதான் கூறவேண்டியது இருக்கிறது.

துணை பிரதமர்

ஜனசங்கத்தை தொடர்ந்து பா.ஜனதாவையும் வலுப்படுத்தியவர் எல்.கே.அத்வானி. அவர் பா.ஜனதா தலைவராக இருந்தபோதுதான் மிகவும் பலம் பொருந்திய கட்சியாக இருந்து நாடாளுமன்றத்தில் 400 உறுப்பினர்களை கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பலம் 200-க்கும் கீழ் சரிந்தது. அப்போதுதான் முதல் முறையாக 1996-ம் ஆண்டு பா.ஜனதா தனிப்பெரும் பலம்வாய்ந்த கட்சியாக தலையெடுத்தது.

எல்.கே.அத்வானியின் நாடாளுமன்ற அனுபவம் 1970-ல் தொடங்கியது. நெருக்கடி நிலையின்போது ஜனநாயகத்தை காப்பாற்ற அவர் தீவிரமாக களப்பணியாற்றினார். 1977-ல் ஜனதா அரசு பதவியேற்ற நேரத்தில் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரியாக இருந்தார். வாஜ்பாய் அரசில் துணை பிரதமராக பணியாற்றி, அவருக்கு பக்க பலமாக இருந்தவர். நீண்ட காலம் உள்துறை மந்திரியாக இருந்தவர்களில் அவரும் ஒருவர்.

பாரத ரத்னா விருது

அரசியல் வாழ்க்கையை பொறுத்தமட்டில் 1990-ல் சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை எல்.கே.அத்வானி நடத்திய ரத யாத்திரை இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், பா.ஜனதாவின் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருந்தது. அவரது அரசியல் வாழ்வில் பல சர்ச்சைகளும்,விமர்சனங்களும் உண்டு. 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமாக அவர் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

2020-ம் ஆண்டு லக்னோ நீதிமன்றம் அந்த வழக்கில் அவரை விடுவித்தது. 2024-ல் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் பாரத ரத்னா விருது வாங்கிய வெகுசிலரில் எல்.கே.அத்வானியும் ஒருவர். அரசியல் வாழ்விலும், அரசு நிர்வாகத்திலும் பல விமர்சனங்களையும், புகழ் மாலைகளை ஒருங்கே சந்தித்த எல்.கே.அத்வானி, அரசியலில் பல தலைமுறை மாற்றங்களையும், திருப்பங்களையும் கண்டவர். வாழும்போதே பல வரலாறுகளையும் படைத்தவர்.

X