

எல்லா வளத்துக்கும் அடிப்படையானது நீர் வளம்தான். தமிழ்நாட்டில் வளைந்து, நெளிந்து போகும் ஆறுகள் மிகவும் குறைவாக இருக்கின்றன. நமது மாநிலத்துக்குள்ளேயே தோன்றி கடலில் கலக்கும் ஒரே ஆறு தாமிரபரணி மட்டும்தான். தமிழ்நாடு தனது தேவைக்காக வடகிழக்கு பருவ மழையைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறது.
மத்திய நீர்வள ஆணையம் கடந்த 2023-ம் ஆண்டில் முதல் முறையாக நீர்நிலைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது. இதில் சில மாநிலங்களில் உள்ள அணைகளின் எண்ணிக்கையை நம்மோடு ஒப்பிட்டால் நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பது கவலையளிக்கத்தக்கதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 57 நீர்நிலைகள் இருந்தாலும், அதில் 56 ஆயிரத்து 760 நீர்நிலைகளில் மட்டுமே தண்ணீர் வந்து, போய்க்கொண்டு இருக்கின்றன.
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பயன்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் தமிழ்நாட்டின் பங்கு 2.80 சதவீதம் மட்டுமே உள்ளது. அதேவேளையில் கர்நாடகாவில் பயன்பாட்டில் 5 ஆயிரத்து 874 நீர்நிலைகள் இருந்தாலும், அதில் மத்திய நீர்வளத்துறை கண்காணிப்பில் இருக்கும் பெரிய அணைகள் மட்டும் 16 இருக்கின்றன. அதன் மொத்த கொள்ளளவு மட்டும் 870 டி.எம்.சி.யாகும்.
ஆனால் தமிழ்நாட்டில் அதிகளவில் நீர்நிலைகள் இருந்தாலும், மத்திய நீர்வளத்துறை கண்காணிப்பில் வெறும் 9 அணைகளே இருக்கின்றன. அதன் சேமிப்புத்திறன் வெறும் 167 டி.எம்.சி.தான். ஆக நீர் சேமிப்பில் தமிழ்நாடு எவ்வளவு பின்தங்கியிருக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாகும். பயன்பாட்டில் இல்லாத நீர்நிலைகளை உடனடியாக தூர்வாரிச் செப்பனிடவேண்டும், நீரை சேமிக்கவேண்டும் என்பதையே கணக்கெடுப்பு அறிவுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் பெரிய மற்றும் சிறிய அளவிலான அணைகள் 116 மட்டுமே இருக்கின்றன. அதிலும் 1980-க்கு முன்பு கட்டப்பட்ட அணைகளின் எண்ணிக்கை 72 ஆகும். இந்த அணைகளில் பெரும்பாலானவை பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டியதாகும். கர்நாடகாவில் 231 அணைகள் இருக்கின்றன.
உலகத்துக்கே நீர் மேலாண்மையை கடைபிடித்து விவசாயம் செய்வது குறித்தும், நீர் நிலைகளை உருவாக்கவும் கற்றுக்கொடுத்த தமிழகம் இன்று தனது நிலத்தில் பயிர் சாகுபடி செய்ய அண்டை மாநிலங்களை எதிர்நோக்கி தண்ணீருக்காக தவமாய் தவம் கிடக்கும் நிலையை பார்த்து, 'ஏ தமிழகமே! உனக்கா இந்த நிலை' என்று வருத்தப்படவேண்டியது இருக்கிறது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும் கம்பீரமாக காட்சி தருவது தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மழைக்காலங்களில் நமது ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடி வீணாக கடலில் போய் கலக்கும் தண்ணீரைப் பார்க்கும்போது கண்களில் இருந்தும் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. இதற்கு நல்ல வழி எது என்றால், சட்டசபையில் சவுமியா அன்புமணி சொன்னதுபோல, தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டவேண்டும், ஏரிகள் உள்பட அனைத்து நீர் நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் தூர்வாரவேண்டும். இதன்மூலமே 250 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்கமுடியும்.
அணைகள் கட்டிய காமராஜரை கொள்கை தலைவராகக் கொண்ட முதல்-அமைச்சர் விஜய்யின் போர்ப்படை தளபதியாக இருக்கும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் சட்டசபையில் தனது துறையின் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து பேசும்போது, 13 மாவட்டங்களில் ரூ.206 கோடியில் 27 தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. இதுமட்டுமல்லாமல், இன்னும் வாய்ப்புள்ள அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டி மாநிலத்தின் நீர்வளத்தை அமைச்சர் புஸ்சி ஆனந்த் பெருக்கவேண்டும்.