குழந்தை பெற ஊக்கமளிக்கும் சீனா

ஒரு தம்பதிக்கு 3 குழந்தைகள் என்பதை ஊக்குவிக்கும் வகையில் சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
குழந்தை பிறப்பு, சீனா
Published on

அமெரிக்காவின் புகழ்பெற்ற 'வால் ஸ்டிரீட் ஜர்னல்' பத்திரிகையில் சமீபத்தில் சீனாவை பற்றி 2 செய்திகள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டிருந்தன. ஒன்று அந்த நாட்டின் அபரிமிதமான வளர்ச்சி. அமெரிக்காவுடனான வர்த்தக போர். சீனாவின் பொருளாதாரத்தை புரட்டி போட்டுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், அதன் ஏற்றுமதியில் உருவான வளர்ச்சி இதனை தவிடு பொடியாக்கிவிட்டது.

சீனாவின் பிறப்பு விகிதம்

இதனால் அந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியும் 5 சதவீதம் அதிகரித்துவிட்டது. 2-வது சீனாவின் பிறப்பு விகிதம் இதுவரையில் இல்லாத அளவுக்கு சரிந்துவிட்டது என்ற செய்தியும் இடம் பெற்றிருந்தது.

குழந்தைகள் பிறப்பு சரிவு

சீனாவில் கடந்த 2024-ம் ஆண்டு இறுதியில் 140 கோடியே 80 லட்சமாக இருந்த மக்கள் தொகையின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டு இறுதியில் 140 கோடியே 50 லட்சமாக குறைந்துவிட்டது. இதேபோல 2024-ல் 95 லட்சத்து 40 ஆயிரமாக இருந்த குழந்தைகள் பிறப்பு, 2025-ல் 79 லட்சத்து 20 ஆயிரமாக சரிந்துள்ளது. கடந்த 2024-ல் 1,000 பேருக்கு 6.77 என்ற விகிதத்தில் இருந்த பிறப்பு விகிதம், 2025-ல் 5.63 ஆக குறைந்துவிட்டது.

மக்கள் குடியரசு நாடாக சீனா உருவான 1949-ம் ஆண்டில் இருந்து இதுவரை உள்ள கணக்கீட்டை பார்த்தால் இப்போதுதான் குழந்தை பிறப்பும், குழந்தைகள் பிறப்பு விகிதமும் மிக குறைவாக பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் இந்த காலக்கட்டங்களில் இறப்பு விகிதம் உயர்ந்திருக்கிறது. ஒரு கோடியே 9 லட்சம் ஆக இருந்த இறப்புகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு ஒரு கோடியே 13 லட்சமாக அதிகரித்துள்ளது.

அதிக மக்கள்தொகை - இந்தியா முதலிடம்

2024-ல் பிறப்பு விகிதம் சற்று உயர்ந்தது. இதற்கு அந்த ஆண்டு திருமணத்துக்கும், குழந்தை பெற்றெடுப்பதற்கும் உகந்த டிராகன் ஆண்டாக வந்ததே காரணம் ஆகும். சீனாவில் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற கொள்கை 2015-ம் ஆண்டு முதல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

வயதானவர்கள் அதிகரித்துக்கொண்டு இருந்த நிலையில், எதிர்கால வளர்ச்சியை இது அச்சுறுத்தும் என்பதால் சீன தலைவர்கள் குழந்தைகள் பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகள் பராமரிப்பு உதவித்தொகை போன்ற புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். 2023-ம் ஆண்டு வரை உலகிலேயே சீனாதான் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற நிலை மாறி. இப்போது இந்தியா அந்த இடத்தை பிடித்துவிட்டது என்று 'வால் ஸ்டிரீட் ஜர்னல்' செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கவர்ச்சிகரமான திட்டம்

குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கருத்தடை சாதனங்களுக்கு ஏற்கனவே இருக்கும் வரியோடு 13 சதவீத மதிப்பு கூட்டு வரி கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் குழந்தை பிறந்தால் முதல் 3 ஆண்டுகளுக்கு 500 அமெரிக்க டாலருக்கு இணையான 3,600 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.50 ஆயிரம்) என்ற சீன பணம் வழங்கப்படும் என்றும் சீன அரசாங்கம் கவர்ச்சிகரமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுபோல கிண்டர் கார்டன் (கே.ஜி.) பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பணிகளில் ஓய்வுபெறும் வயதும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் ஒரு தம்பதிக்கு 3 குழந்தைகள் என்பதை ஊக்குவிக்கும் வகையில் சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குடும்ப கட்டுப்பாடு குறித்து உலகமே பேசிவரும் நிலையில் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் முயற்சியில் சீனா மும்முரமாக இறங்கியிருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com